அவுரங்காபாத்: பிகார் சட்டப்பேரவை தேர்தலில் மஜ்லிஸ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றிபெற்றது, மஜ்லிஸ் கட்சியை பாஜகவின் இரண்டாம் அணி என கூறியவர்களுக்கு கிடைத்த பதிலடி என அக்கட்சியின் எம்பி இம்தியாஸ் ஜலீல் தெரிவித்துள்ளார்.
பிகார் தேர்தல் முடிவு நம்மை விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி - மஜ்லிஸ் கட்சி - அசாதுதீன் ஒவைசி
பிகார் மக்கள் நம் மீதுள்ள நம்பிக்கையை நிரூபித்துள்ளனர். இது வெறும் ஆரம்பம்தான் என இம்தியாஸ் ஜலீல் தெரிவித்துள்ளார்.
அசாதுதீன் ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி பிகார் தேர்தலில் இஸ்லாமிய பெரும்பான்மையுள்ள 5 தொகுதிகளில் வெற்றிபெற்றது. மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்ற வேளையில், மஜ்லிஸ் கட்சியை பாஜகவின் இரண்டாம் அணி என காங்கிரஸ் விமர்சித்தது. அதுமட்டுமல்லாமல் பாஜகவுடன் மஜ்லிஸ் கட்சி கூட்டணி அமைக்கும் எனவும் கூறியது.
இந்த சூழலில், 5 தொகுதிகளின் வெற்றியை கொண்டாட அக்கட்சியின் அவுரங்காபாத் எம்பி இம்தியாஸ் ஜலீல் தலைமையில் நேற்றிரவு பேரணி நடைபெற்றது. இது குறித்து ஜலீல் வெளியிட்ட வீடியோவில், மஜ்லிஸ் கட்சி மீது நம்பிக்கை வைத்த சீமாஞ்சல் பிராந்திய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நம்மை பாஜகவின் இரண்டாம் அணி என விமர்சித்த கும்பலுக்கு இது தக்க பதிலடி. பிகார் மக்கள் நம் மீதுள்ள நம்பிக்கையை நிரூபித்துள்ளனர். இது வெறும் ஆரம்பம்தான் என தெரிவித்துள்ளார்.