ஹைதராபாத் (தெலங்கானா):வரும் தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் ஐதராபாத்தில் போட்டியிடுமாறு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி சவால் விடுத்துள்ளார்.
தனது நாடாளுமன்றத் தொகுதியான ஹைதராபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அகில இந்திய மஜ்லிஸ் (ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதுதீன் ஓவைசி அடுத்த மக்களவை தேர்தலில் வயநாட்டுக்கு பதிலாக ஐதராபாத்தில் போட்டியிடுமாறு ராகுல் காந்திக்கு சவால் விடுத்தார்.
காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தான் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டதாக கூறிய அவர், நான் உங்கள் தலைவர் ராகுல் காந்திக்கு ஐதராபாத்தில் இருந்து போட்டியிடுமாறு சவால் விடுகிறேன். தொடர்ந்து பெரிய வாக்குறுதிகளைக் கொடுத்து வருகிறீர்கள், களத்துக்கு வந்து என்னை எதிர்த்து போட்டியிடுங்கள். நான் தயார் எனக் கூறினார்.
இந்த ஆண்டு இறுதியில் தெலங்கானாவில் நடக்க உள்ள சட்டப் பேரவை தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற பி.ஆர்.எஸ்., பாஜக. காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இம்மாத தொடக்கத்தில் தெலங்கானாவின் துக்குகுடாவில் உள்ள விஜயபேரி சபாவில் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், தெலுங்கானாவில் பாரதிய ஜனதா கட்சி, பாரத ராஷ்டிர சமிதி மற்றும் ஏஐஎம்ஐஎம் ஆகியவை ஒற்றுமையாக செயல்படுவதாகவும், இந்த மூன்று கூட்டணிக்கு எதிராக தனது கட்சி போராடுவதாகவும் கூறி இருந்தார்.