ஜம்மு:ஜம்முவில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கிற்குச் செல்லும் வழியில், இன்று(நவ.19) நான்கு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஒரு உயர் காவல் துறை அலுவலர், 'இந்த மாத இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில் இடையூறு விளைவிப்பதற்காக பயங்கரவாதிகள் மூலம் பாகிஸ்தான் சில தொந்தரவுகளைத் தருகிறது' என்றார்.
இன்று காலை ஜம்மு- காஷ்மீரின் தேசிய நெடுஞ்சாலையில் நக்ரொட்டா சுங்கச்சாவடி அருகே இந்த என்கவுன்ட்டர் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதில் கொல்லப்பட்ட 4 பேரும் ஜெய்ஷ்-இ-முகமது குழுவைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுகின்றனர்.
கடந்த சில நாட்கள் ஊரக தேர்தல்களை சீர்குலைப்பதற்காக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் ஊடுருவலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஊடுருவும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தொடர்ந்து கண்காணித்து, அவர்களின் சதித்திட்டங்களை முறியடித்து வருகின்றனர். இதன்மூலம் காஷ்மீரில் நிகழும் தேர்தலை சீர்குலைக்க முயல்வதாக காஷ்மீருக்கான காவல் துறைத் தலைவர் விஜய் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜம்மு காஷ்மீரில் இருக்கும் காவல் துறையினர், இந்த சதிவேலைகளை களையும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் விஜய் குமார் தெரிவித்தார்.
'சுதந்திர தினமாக இருந்தாலும் சரி, குடியரசு தினமாக இருந்தாலும் சரி, அல்லது முக்கிய நபரின் வருகையாக இருந்தாலும் சரி, தேர்தலாக இருந்தாலும் சரி இது போன்ற இடைஞ்சல்கள் வருவது சகஜம் தான். இருந்தாலும், அதை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக உள்ளோம். நேற்று(நவ.18) முதல் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட வேட்பாளர்களுக்கு , காவல் துறை உரிய பாதுகாப்பை வழங்கி வருகிறது. இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை.
வரும் நவம்பர் 28ஆம் தேதி மாவட்ட மேம்பாட்டு கவுன்சிலின் முதற்கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் பங்கேற்கும் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது என்பது கடினமான காரியம் ஆகும்.
எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் 200 முதல் 250 பயங்கரவாதிகள் ஜம்மு- காஷ்மீர் பகுதிக்குள் நுழைவதற்குத் தயார் நிலையில் இருந்தாலும், அவர்கள் எவ்வாறு எல்லாம் நுழைய நினைக்கிறார்களா அவர்களை எதிர்கொள்வதற்கு ஜம்மு காஷ்மீர் காவல் துறை நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது' என ஜம்மு - காஷ்மீருக்கான காவல் துறை தலைவர் விஜய் குமார் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
நேற்று(நவ.18) காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ககபோரா என்னும் இடத்தில் நடைபெற்ற கையெறிகுண்டுத் தாக்குதலில், பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் மத்திய பாதுகாப்புப் படையினரையும், காவல் துறை அலுவலர்களையும் தாக்க நடந்த இந்த முயற்சியில் 12 பொதுமக்கள் காயமடைந்தனர். இந்நிலையில் இந்த கையெறி குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை விரைவில் கைது செய்வோம் என விஜய் குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குப்கர் கூட்டணி: ஜம்மு கஷ்மீர் பிராந்திய கட்சிகளிடையே குறைந்து வரும் கருத்து வேறுபாடுகள்