ஸ்ரீநகர் (ஜம்மு காஷ்மீர்): ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி கொல்லப்பட்டதாகப் போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்தச் சம்பவத்தில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை அதன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. அந்தப் பதிவில், “குல்காம் மாவட்டத்தின் ஹூரா கிராமத்தில் என்கவுன்ட்டர் தொடங்கியுள்ளது. காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பணியில் உள்ளனர். ஒரு ஜேகேபி வீரர் காயமடைந்தார். நடவடிக்கை நடந்து வருகிறது” எனத் தெரிவித்து உள்ளது.
மேலும் இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல்துறையின் பதிவிட்டு உள்ள மற்றொரு ட்விட்டர் பதிவில், “ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது அடையாளம் மற்றும் தகவல்கள் கண்டறியப்படுகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட நபரிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளன. மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது” என்று காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்து உள்ளது.
வடக்கு காஷ்மீரின் எல்லை மாவட்டமான குப்வாராவின் மச்சில் பகுதியில் எல்லைப் பகுதி வழியாக நடந்த ஊடுருவல் முயற்சியின் போது நான்கு அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளைக் கொன்றதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை கூறிய சில நாட்களுக்குப் பிறகு இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.