சிம்லா:இமாச்சலப் பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தில் உள்ள பாங் அணைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் வருகை தருவது வழக்கம். இந்த வருகையால் பாங் அணை பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
மத்திய ஆசியா, சைபீரியா, சீனா மற்றும் மங்கோலியாவில் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை நிலவும் கடும் பனிக்காலத்தை தவிர்ப்பதற்காக இந்த பறவைகள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களை கடந்து இமாச்சலப் பிரதேசம் வருகின்றன. அதன்பின் 2 மாதங்கள் கழித்து கோடை கால தொடக்கத்தில் மீண்டும் திரும்புகின்றன.
அந்த வகையில், 108 வகையான வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து செல்கின்றன. கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை 1,10,309 பறவைகள் வந்து சென்றிருந்தன. ஆனால், இந்தாண்டு 1,17,022 பறவைகள் வந்துள்ளன. இந்த கணக்கெடுப்பு பணி ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்பட்டது.