கர்நாடகா:கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று(மே.13) நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதிக தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. ஆனால், கடந்த 2018 தேர்தலைப் போலவே, இந்த முறையும் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கடந்த முறை குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைத்த நிலையில், 13 மாதங்களிலேயே ஆட்சி கலைக்கப்பட்டது. இந்த கூட்டணியில் இருந்த 17 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சியை கைப்பற்றியது. அப்போது, காங்கிரஸ் கூட்டணியிலிருந்து பாஜகவுக்கு சென்ற எம்எல்ஏக்கள், இந்த முறை பாஜக சார்பில் போட்டியிட்டுள்ளனர். அவர்களின் விபரங்களைக் காண்போம்...
ரமேஷ் ஜார்கிஹோலி
ரமேஷ் ஜார்கிஹோலி கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ஐந்து முறை வெற்றி பெற்றார். கடந்த 2019ஆம் ஆண்டு, காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கூட்டணி அரசுக்கு எதிராக கிளர்ச்சியை ஏற்படுத்தியதில் முக்கியமானவர். பின்னர் 2019-ல் நடந்த இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் இவர் மீண்டும் கோகாக் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார்.
எம்டிபி நாகராஜ்
இவர் கடந்த 2013 மற்றும் 2018 பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போடியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் காங்கிரசை விட்டு வெளியேறி பாஜகவில் சேர்ந்தார். ஆனால், 2019 இடைத்தேர்தலில் தோல்வியடைந்தார். 2018 தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த சரத் பச்சேகவுடா, பாஜகவுக்கு எதிராக கிளர்ச்சி செய்து, இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறையும் ஹோசகோட் தொகுதியில் நாகராஜை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் சரத் பச்சேகவுடா போட்டியிட்டார்.
கே.சுதாகர்
சுதாகர், கடந்த 2013 மற்றும் 2018 பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போடியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் பாஜகவில் இணைந்து இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இடைத்தேர்தலில் இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அஞ்சனப்பா தோல்வியடைந்தார். இம்முறை சிக்கபல்லாபுரா தொகுதியில், சுதாகர் பாஜக சார்பில் போட்டியிட்டார்.
பி.சி.பாட்டீல்
2018-ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு பி.சி.பாட்டீல் வெற்றி பெற்றார். 2019 இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். கடந்த 2018-ல் பாஜக சார்பில் போட்டியிட்ட யுபி.பனாகர், பாஜகவிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். தற்போதைய தேர்தலில், ஹிரேகரூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பி.சி.பாட்டீலை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் யுபி.பனாகர் போட்டியிட்டார். இவர்கள் இருவருக்கும் பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது.
சிவராம் ஹெப்பர்
சிவராம் ஹெப்பர், கடந்த 2013 மற்றும் 2018 பேரவை தேர்தலில், காங்கிரசிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், அவர் பாஜகவில் சேர்ந்து 2019 இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். 2013 மற்றும் 2018 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் பாஜக சார்பில் போட்டியிட்ட விஎஸ் பாட்டீல் தோல்வியடைந்தார். தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் யல்லாபுரா தொகுதியில், பாஜகவின் சிவராம் ஹெப்பரை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் விஎஸ் பாட்டீல் போட்டியிட்டார்.
எஸ்.டி.சோமசேகர்
எஸ்.டி.சோமசேகரும், 2013, 2018 ஆகிய இரு பேரவை தேர்தல்களில், காங்கிரசிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த இரு முறையும் ஜேடிஎஸ் சார்பில் போட்டியிட்ட டிஎன் ஜவராய் கவுடா தோல்வியடைந்தார். தற்போதைய தேர்தலிலும் யஷ்வந்த்புரா தொகுதியில் எஸ்.டி.சோமசேகரை எதிர்த்து ஜவராய் கவுடாவை ஜேடிஎஸ் நிறுத்தியுள்ளது. மறுபுறம் காங்கிரஸ் சார்பில் பாலராஜ் கவுடா போட்டியிட்டார்.
பைரதி பசவராஜ்