தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மும்பை சென்சார் போர்டு மீது புகாரளித்த நடிகர் விஷால்; மத்திய அமைச்சகம் விசாரணை! - ஈடிவி தமிழ்நாடு

Ministry of Information and Broadcasting: நடிகர் விஷால் சென்சார் போர்டு (CBFC) மீது அளித்த புகாரின் போரில், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி விசாரணைக்காக மும்பை அனுப்பி வைக்கப்பட்டதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ministry-of-information-and-broadcasting-responds-to-actor-vishals-corruption-charges-on-cbfc-assures-strictest-action
நடிகர் விஷால், தணிக்கைத்துறை மீது ஊழல் புகார் - மூத்த அதிகாரி விசாரணைக்கு மும்பை விரைந்தனர்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2023, 4:20 PM IST

சென்னை:நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம், இதுவரை ரூ.80 கோடி வரை வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளன. இப்படத்தில், எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். தமிழில் இப்படத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய வரவேற்பை அடுத்து, இப்படம் நேற்று இந்தியில் வெளியாகியது.

இதையும் படிங்க:பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வரும் விஷாலின் 'மார்க் ஆண்டனி' இன்று இந்தியில் ரிலீஸ்!

இந்த நிலையில், 'மார்க் ஆண்டனி' படத்தினை இந்தியில் வெளியிட மும்பை சென்சார் போர்டு (CBFC) லஞ்சம் கேட்டுள்ளதாக நடிகர் விஷால் நேற்று (செப்.28) பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இது குறித்து அவர் தனது "X" பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “திரைத்துறையில்தான் நான் ஊழலைப் பார்த்துள்ளேன். நிஜத்தில் நடந்துள்ளது. இதனை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

அரசு அலுவலகமான, மும்பை சென்சார் போர்டு அலுவலகத்தில் 'மார்க் ஆண்டனி' இந்தி பதிப்பை வெளியிட ரூ.6.5 லட்சம் கேட்கின்றனர். 3 லட்சம் படத்தை இந்தியில் திரையிடவும், 3.5 லட்சம் சான்றிதழ் வழங்கவும் கேட்கின்றனர். எனது திரை வாழ்வில் இது போன்ற ஒன்றை நான் எதிர்கொண்டதில்லை. எங்களுக்கு வேறு வழியில்லை. ஏராளமானோருக்குப் பங்கு செல்கிறது. இந்த விஷயத்தை பிரதமர் மோடியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன்.

இதையும் படிங்க:'கொலைச்சேவல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

இது எனக்காக மட்டுமல்ல, எதிர்காலத்தில் வேறு தயாரிப்பாளர்களுக்கு இதுபோல் நடக்கக் கூடாது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊழலுக்கு செல்வதா?” என்றும், தன்னிடம் உள்ள ஆதாரங்களைப் பதிவிடுகிறேன் என்று மீடியேட்டர் மேனகா என்பவர் பேசும் ஆடியோவையும் விஷால் வெளியிட்டார். மேலும், உண்மை எப்போதும் வெல்லும் என்றும் பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ "X" பக்கத்தில், மும்பை தணிக்கைத் துறை (CBFC) ஊழல் விவகாரம் நடிகர் விஷாலால் முன்வைக்கப்பட்டது மிகவும் துரதிருஷ்டவசமானது என்றும், இந்த ஊழலை அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், “இந்த ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் குறித்து மும்பை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ள, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி இன்று (செப்.29) மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மும்பை திரைப்பட தணிக்கை (CBFC) அலுவலகத்தினால் யாரும் பாதிக்கப்பட்டால் அவர் jsfilms.inb@nic.in என்ற மின்னஞ்சலுக்கு தங்களது புகார்களை அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நடிகர் சித்தார்த்தை சூழ்ந்த கன்னட அமைப்பினர்.. நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details