தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங்கின் லஞ்சப் புகார்: சிபிஐ விசாரணை நடத்த உத்தரவு - bribery complaint

புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங்கிற்கு எதிரான லஞ்சப் புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சிபிஐ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங்கின் லஞ்சப் புகார்
புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங்கின் லஞ்சப் புகார்

By

Published : Aug 2, 2023, 9:06 PM IST

சென்னை:நாடு முழுவதும் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்க, தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் மனித வள மேம்பாட்டு மையத்தை மத்திய அரசு அமைத்து உள்ளது.

இதேபோல, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மனித வள மேம்பாட்டு மையத்தின் சார்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, போலி ரசீதுகள் தயாரித்து 2 கோடியே 25 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக மைய இயக்குநர் மற்றும் பேராசிரியர் ஹரிஹரன் மீது புகார்கள் எழுப்பப்பட்டன.

இந்த விவகாரம் தொடர்பாக தன் மீது குற்றம் மற்றும் துறைரீதியான நடவடிக்கைகள் எடுப்பதைத் தவிர்க்கும் வகையில் பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங்கிற்கு, 50 லட்சம் ரூபாயை ஹரிஹரன் லஞ்சமாக கொடுத்துள்ளார். இது சம்பந்தமாக அளிக்கப்பட்ட புகார் மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஐ-க்கு உத்தரவிடக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க புதுச்சேரி செயலாளர் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தார்.

இதையும் படிங்க:NLC Issue: சேதப்படுத்தப்பட்ட நெற்பயிர்கள்.. ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாயை இழப்பீடு வழங்க உத்தரவு!

இந்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் இன்று(ஆகஸ்ட் 2) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊழல் தடுப்புச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட புதிய திருத்தத்தின்படி, வழக்குத் தொடர அனுமதிகோரி மத்திய கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பியதாகவும், ஆனால் புதுச்சேரி பல்கலைக்கழகம் அதற்கு அனுமதி வழங்க மறுத்து கடிதம் அனுப்பி உள்ளதாகவும் மத்திய கல்வித்துறை பதிலளித்ததாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில், மனுதாரரின் புகாருக்கு ஆதாரங்கள் உள்ளது எனத் தெரிவித்த நீதிபதி, பொய் ஊழல் புகார்களில் இருந்து அதிகாரிகளை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தை ஊழல் அதிகாரிகளை காப்பாற்ற துஷ்பிரயோகம் செய்ய அனுமதிக்க முடியாது எனக் கூறி, புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள சிபிஐ-க்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க:மயிலாடுதுறையில் ஆய்வுக்கு வந்த ரயில்வே அதிகாரியை அலறவிட்ட முன்னாள் எம்எல்ஏ!

ABOUT THE AUTHOR

...view details