மும்பை:மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணிகளின் அரசு 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஆட்சியில் இருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா சட்டப்பேரவை உறுப்பினர்கள், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அதிருப்தியில் இருந்தனர்.
இதனால் அப்போதைய துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால், ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சட்டப்பேரவை உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். பின்னர், அந்த 16 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இந்தச் சூழலில் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் உத்தவ் தாக்கரே தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அப்போதைய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். இதற்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே வழக்குத் தொடர்ந்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கவில்லை. இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமல் உத்தவ் தாக்கரே தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
மறுதினமே ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்து, மகாராஷ்டிராவில் புதிய அரசை அமைத்தனர். ஆட்சி மாற்றம் தொடர்பாக உத்தவ் தாக்கரே உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கினை தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் எம்.ஆர். ஷா, கிருஷ்ண முராரி, ஹிமா கோலி, நரசிம்மா ஆகியோரது அமர்வு விசாரணை செய்து நேற்று ( மே 11 ) தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பில், “உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதனால் ராஜினாமாவை ரத்து செய்துவிட்டு அவரை மீண்டும் முதலமைச்சராக நியமிக்க வாய்ப்பில்லை. அப்போதைய ஆளுநராக இருந்த பகத்சிங் கோஷ்யாரி, உத்தவ் தாக்கரே தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டது தவறானது. இதற்கு, அவர் வலுவான காரணத்தை கூறவில்லை.