புனே: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் இப்போதே மும்முரமாக ஈடுபட தொடங்கி விட்டன. இந்தத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று 'ஹாட்ரிக்' சாதனை படைக்க, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி அரசு தேர்தலுக்கான வியூகங்களை வகுத்து, முழுவீச்சில் செயல்படத் தொடங்கி உள்ளது.
அதேநேரம், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் பிகாரில் உள்ள பாட்னாவில் இன்று (ஜூன் 23) எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் ராகுல் காந்தி, சரத்பவார், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதற்கான முயற்சியை பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் மேற்கொண்டு உள்ளார். இது தொடர்பாக நிதீஷ்குமார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று எதிர்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது.
நிதீஷ் குமார் இல்லத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, முதலமைச்சர் ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சரத் பவார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இன்று நடைபெறும் கூட்டம், தேசிய அளவில் உன்னிப்பாக கவனம் பெறத் தொடங்கியுள்ளது. இன்று நடைபெற உள்ள பொதுத் தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பதுடன், தீர்மானமும் நிறைவேற்றப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.