சோலாப்பூர்:மகாராஷ்டிரா மாநிலத்தில் வெங்காயம் விளைச்சல் கணிசமாக அதிகரித்துள்ளதால், அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. பார்ஷி பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திர துக்காராம் சவான் (58), தனது நிலத்தில் விளைந்த 512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ய வேளாண் விளைபொருள் விற்பனை கூடத்துக்கு கொண்டு சென்றார். ஆனால், கடும் விலை வீழ்ச்சியால், ஒரு குவிண்டால் வெங்காயம் ரூ.100க்கு விலை போனது. அதாவது ஒரு கிலோ வெங்காயம் ரூ.1க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.
மொத்தத்தில் 500 கிலோ வெங்காயத்தை விற்றதில் விவசாயி துக்காராமுக்கு ரூ.512 மட்டுமே கிடைத்தது. எனினும் லாரி வாடகை, சுமை கூலிக்கு ரூ.510ஐ செலவு செய்தார். அந்த வகையில், விவசாயி துக்காராமுக்கு மிஞ்சியது என்னவோ வெறும் 2 ரூபாய் தான். வெங்காயத்தை வாங்கிய கடைக்காரர், விவசாயிடம் 2 ரூபாய்க்கான காசோலையை வழங்கிய நிலையில், சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதனால் விவசாயி துக்காராம் கடும் வேதனை அடைந்தார்.