பரத்பூர் (ராஜஸ்தான்):ராஜஸ்தான் மாநிலம் மேவாட் பகுதியில் உள்ள ருந்த் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் ஐஏஎஸ் அலுவலர் ஜபார் கான். ஜபார் கான் தற்போது ஆழ்வாரில் மூத்த அஞ்சலக கண்காணிப்பாளராக (Senior Superintendent of Post Office (SSP)) பணியாற்றி வருகிறார்.
பெற்றோர் ஆழ்வார் பகுதிக்கு வந்தபோது, அவர்களை தன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்து சென்று, தான் பணியாற்றும் அலுவலக சேரில் அமர வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எளிய பின்னணியில் பிறந்து வளர்ந்து ஐஏஎஸ் அலுவலர் பதவிக்கு உயர்ந்துள்ள ஜபார் கானை பலரும் பாராட்டி, இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளார் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஜபார் கான் 11ஆம் வகுப்பு வரை தனது சொந்த கிராமத்தில் கல்வி பயின்றார். சிகார் சென்று 12ஆம் வகுப்பு படித்தார். பின்னர் ஆழ்வாரில் பட்டப்படிப்பையும், ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பையும் படித்து முடித்தார். அதன் பின்னர் உதவி ரயில்வே மாஸ்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து யுபிஎஸ்சி தேர்வு மூலம் உதவி ரயில்வே ஆணையராக பணியாற்றினார். அதன் பிறகு 2017இல் இந்திய அஞ்சல் சேவையில் சேர்ந்தார்.
இவரின் இந்த வளர்ச்சி இளைஞர்களுக்கு குறிப்பாக அவரது ஊர் இளைஞர்களுக்கு உத்வேகத்தையும், நம்பிக்கையும் அளித்துள்ளது. நேரம் கிடைக்கும் போது, அவரது கிராமத்து இளைஞர்களுக்கு கல்வி, எதிர்காலத்திற்கு வழிகாட்டி வருகிறார். கல்வி மட்டுமே சமூக முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கு ஒரே வழி என இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டுகிறார்.
இதையும் படிங்க: சென்னை விமானநிலையத்தில் முதன்முறையாக அமைக்கப்படும் 'ஸ்கைலைட் சிஸ்டம்' - அதன் சிறப்பம்சங்கள் தெரியுமா?