காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம் தலைமையில், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசையை, திமுக, காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகையில் வைத்து சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது புதுச்சேரியில் அதிகரித்து வரும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்தான ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பிற்குப் பின் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சிவா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஆளுநரிடம் வலியுறுத்தினோம். சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி ஏற்காத நிலையில், எதன் அடிப்படையில், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களை மட்டும் அழைத்து தலைமை செயலகத்தில் வைத்து அலுவலர்கள் கூட்டம் நடத்தினர்.
எனவே, இது தொடர்பாக ஆளுநர் முறையான விசாரணை மேற்கொள்ளவேண்டுமென கேட்டுக்கொண்டோம். தமிழ்நாட்டைப் போன்று புதுச்சேரியிலும் கரோனா நிவாரண நிதியாக ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டியும் நியாவிலைக்கடைகளில் பொதுமக்களுக்கு தரமான அரிசியை வழங்கவேண்டியும் ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம்.
ஆளும் கட்சிக்குள் அமைச்சர்கள், துணை முதலமைச்சருக்கு இடையே நடைபெற்ற சண்டைக்கு திமுக பொறுப்பு இல்லை. மக்கள் திமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கியுள்ளனர். எனவே, நாங்கள் அரசு தவறாக சென்றால் எதிர்ப்புத் தெரிவிப்போம்" என்றார்.