ஜம்மு - காஷ்மீரில் இந்தியா - பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை ஒட்டிய பகுதியில் இரு நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் இடையே திடீரென நேற்று முன்தினம் (நவம்பர் 13) ஏற்பட்ட சண்டையில் இரு தரப்பையும் சேர்ந்த படையினர், பொதுமக்கள் உள்பட 14 பேர் கொல்லப்பட்டதாக இரு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் போர் நிறுத்தத்தை மீறியதாக இரு நாட்டுப் படையினரும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டுகின்றனர். பதற்றமான சூழலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இருநாட்டு தலைமைகளும் உடனடியாகப் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பி.டி.பி) தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான மெஹபூபா முப்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், "இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே நடந்துவரும் மோதலால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இருநாட்டு தலைவர்களும், அரசியல் கட்டாயங்களை கடந்து மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு வெளிப்படையான உரையாடலை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
முன்னாள் இந்திய பிரதமர் ஏ.பி.வாஜ்பாய் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் ஆகியோர் ஒப்புக் கொண்ட மற்றும் நடைமுறைப்படுத்திய போர் நிறுத்தத்தை மீண்டும் நடைமுறைக்கு இரு அரசுகளும் கொண்டுவர வேண்டும். அமைதியை மீட்டெடுப்பது இப்போதைக்கு மிக முக்கியமான அரசியல் நடவடிக்கையாக இருக்கும் என்று கருதுகிறேன்.
இரு பக்கங்களிலும் பெருகிவரும் உயிரிழப்புகளைக் காணும்போது வருத்தமாக இருக்கிறது. இந்திய மற்றும் பாகிஸ்தான் தலைமைகளால் மட்டுமே நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும்" என குறிப்பிட்டுள்ளார். இந்தியத் தரப்பில் 6 பேரும் (மூன்று படையினார், மூன்று பொதுமக்கள்), பாகிஸ்தான் தரப்பில் 8 பேரும் (நான்கு படையினர், நான்கு பொதுமக்கள்) உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.