தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

43 புதிய ஒன்றிய அமைச்சர்கள் யார்; அவர்களின் சுயவிவரங்கள் என்ன?

பிரதமர் மோடி 2ஆவது முறையாக பதவி ஏற்றதற்கு பின், ஒன்றிய அமைச்சரவையில் இதுவரை எந்த ஒரு பெரிய மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், 43 பேரை ஒன்றிய அமைச்சர்களாக நியமித்து பட்டியல் வெளியிட்டுள்ளது, ஒன்றிய அரசு. அவர்களைப் பற்றிய விவரங்களைக் காண்போம்.

d
43 புதிய

By

Published : Jul 7, 2021, 6:04 PM IST

Updated : Jul 8, 2021, 4:37 PM IST

நாராயண் டாட்டு ரானே (வயது 69): மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியைச் சேர்ந்தவர்.

மகாராஷ்டிராவில் இருந்து முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினர் ஆனவர். முன்னதாக 6 முறை எம்.எல்.ஏவாகவும், ஒரு முறை எம்.எல்.சி-ஆகவும் இருந்தவர். மகாராஷ்டிராவின் முதலமைச்சராகவும் ஒன்றிய அமைச்சராகவும் பதவி வகித்தவர்.

சர்பானந்த சோனாவால் (வயது 58): அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ரூகர் பகுதியைச் சேர்ந்தவர். கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்தவர். அஸ்ஸாம் மாநில முதலமைச்சராகவும் இருந்தவர்.

வீரேந்திர குமார் (வயது 67):

மத்தியப்பிரதேசத்தின் சாகர் பகுதியைச் சேர்ந்தவர். குழந்தைத் தொழிலாளிகள் பற்றி ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக மக்கள் பணியில் உள்ளார். 7ஆவது முறையாக மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜோதிராதித்ய சிந்தியா (வயது - 50):மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்தவர். மாநிலங்களவை உறுப்பினரான இவர் 5ஆவது முறையாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் மாதவராவ் சிந்தியாவின் மகன்.

ராமச்சந்திர பிரசாத் சிங் (வயது - 63):

பிகாரின் நாளந்தா நகரைச் சேர்ந்தவர். ஐஏஎஸ் அலுவலராக இருந்தவர். இரண்டாவது முறையாக மாநிலங்களவைக்குள் நுழைந்து மக்கள் பணியாற்றி வருகிறார்.

அஸ்வினி வைஷ்ணவ் (வயது - 50): ஒடிசா மாநிலத்தைச் சார்ந்தவர். இவரும் ஓர் முன்னாள் ஐஏஎஸ் அலுவலர்.

பசுபதி குமார் பரஸ் (வயது -68):பிகாரின் முங்கேர் பகுதியைச் சார்ந்தவர். பிகாரின் ஹஜிபூர் பகுதியின் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பிகார் மாநில அமைச்சராக இருந்தவர். முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் சகோதரர்.

கிரண் ரிஜிஜூ (வயது 49): அருணாச்சலப் பிரதேச மாநிலச் சேர்ந்த இவர் வழக்கறிஞர். இரண்டு முறை இணை அமைச்சராகப் பதவி வகித்தவர்.

ராஜ் குமார் சிங் (வயது 68):மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் பகுதியைச் சார்ந்தவர். முதல்முறையாக மக்களவைக்குத் தேர்வானவர்.

ஹர்தீப் சிங் பூரி (வயது 69):கடந்த2014ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த இவர் 2019 ஆம் ஆண்டு முதல் வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சி, விமானப் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில் ஆகிய துறைகளின் இணை அமைச்சராகப் (தனி பொறுப்பு) பதவி வகிக்கின்றார்.

மன்சுக் மண்டவியா (வயது 49)

மன்சுக் மாண்டவியா குஜராத் மாநிலத்தின் பாவ் நகர் மாவட்டத்தில் ஹனோல் என்ற சிறு கிராமத்தில் நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்தார். குஜராத்தின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான இவர் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

புபேந்தர் யாதவ் (வயது 52):ராஜஸ்தானின் அஜ்மீர் பகுதியைச் சார்ந்தவர். உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான இவர் 20 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றி வருகிறார்.

பர்ஷொட்டம் ரூபலா(வயது 66):

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பர்ஷொட்டம் ரூபலா எம்.எல்.ஏவாக இருந்தவர். மேலும் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து பஞ்சாயத்துராஜ் மற்றும் விவசாயத்துறைகளின் ஒன்றிய இணை அமைச்சராகப் பதவி வகித்தவர்.

ஜி.கிஷண் ரெட்டி (வயது 61):

ஹைதராபாத்தின் செகந்திரபாத் மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்று பாஜக எம்.பி., ஆகியுள்ளார். உள்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார்.

அனுராக் சிங் தாக்கூர் (வயது 46):

இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் ஹமீர்பூரிலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இமாச்சலப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் பிரேம் குமார் துமலின் மகன் ஆவார். தனது ஆரம்ப வாழ்க்கையில் ஒரு நல்ல கிரிக்கெட்டராகத் திகழ்ந்தார். நிதித்துறை இணையமைச்சராக இருந்து வருகிறார்.

பங்கஜ் செளத்ரி (வயது 56):

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பூர்வாஞ்சல் பகுதியைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றி வருகிறார்.

கோரக்பூரின் முன்னாள் துணை மேயராக இருந்தவர். மஹராஜ் கஞ்ச் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆறாவது முறையாக மக்கள் பணியாற்றி வருகிறார்.

அனுபிரியா சிங் பட்டேல் (வயது 40):

உத்தரப் பிரதேசத்தின் மிர்சாப்பூர் நகரைச் சார்ந்தவர். இரண்டாவது முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சத்ய பால் சிங் பாகேல் (வயது 61):

உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா நகரைச் சார்ந்தவர். முன்னதாக விலங்குகள் நல மற்றும் மீன்கள் துறையின் அமைச்சராக இருந்தவர். வழக்கறிஞரான இவர் ஆக்ராவின் மக்களவை உறுப்பினராக 5ஆவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராஜிவ் சந்திரசேகர் (வயது 57):

கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சார்ந்தவர். முதுநிலை கணிணி பொறியியலாளரான இவர் தொழில் முனைவோராக உள்ளார். மூன்றாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஷோபா கரண்டலஜே (வயது 54):

கர்நாடக மாநிலம், தக்‌ஷிண கன்னடா பகுதியைச் சேர்ந்தவர். 30 ஆண்டுகளாக மக்கள் பணியில் உள்ளார். கர்நாடக அமைச்சரவையில் பணியாற்றிய அவர் உடுப்பி - சிக்மங்களூர் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பானு பிரதாப் சிங் வர்மா (வயது 63):

உத்தரப்பிரதேச மாநிலத்தின் புண்டல்காண்ட் பகுதியைச் சார்ந்தவர். வழக்கறிஞரான இவர் 30 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றி வருகிறார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினராகத் திகழ்ந்த இவர் ஜலூன் மக்களவைத்தொகுதியில் இருந்து 5ஆவது முறையாக எம்.பி.ஆனவர்.

தர்ஷணா விக்ரம் ஜர்டோஷ்(வயது 60):

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரைச் சார்ந்தவர். சுமார் 40 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றி வரும் இவர் சூரத்தில் இருந்து மூன்றாவது முறையாக மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மீனாக்‌ஷி லேகி (வயது 54):

டெல்லியைச் சேர்ந்த இவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் கூட. புதுடெல்லி மக்களவைத் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் சேவை ஆற்றி வருகிறார்.

அன்னபூர்ணா தேவி(வயது 51)

ஜார்க்கண்ட் மாநிலத்தின் வடக்கு சோட்டங்பூர் பகுதியைச் சார்ந்தவர். ஒருங்கிணைந்த பிகார் மாநிலத்தில் முன்னாள் அமைச்சராக இருந்தவர். பிகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் 4 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் கொடர்மா மக்களவைத் தொகுதியில் இருந்து எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நாராயணசுவாமி (வயது 64):

கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா பகுதியைச் சார்ந்தவர். சுமார் 30 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றி வரும் இவர் கர்நாடக சட்டப்பேரவையிலும் அமைச்சராக இருந்துள்ளார். 4 முறை எம்.எல்.ஏ-வாக இருந்த இவர் சித்ரதுர்கா மக்களவைத்தொகுதியில் இருந்து முதல்முறையாக எம்.பி.,யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கவுசல் கிஷோர் (வயது 61):

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆவத் பகுதியைச் சார்ந்தவர். சுமார் 30 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றி வரும் இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் அமைச்சராக இருந்திருக்கிறார். மோகன்லால் கஞ்ச் என்னும் மக்களவைத்தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக இவர் எம்.பி., ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

அஜய் பட் (வயது 60):

உத்தரகாண்ட் மாநிலத்தின் அல்மோரா பகுதியைச் சார்ந்தவர். சுமார் 25ஆண்டுகளாக மக்கள் பணியாற்றி வரும் இவர் ஒரு வழக்கறிஞரும் கூட. மூன்றுமுறை உத்தரப்பிரதேச மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தின் எம்.எல்.ஏக்களாக பொறுப்பு வகித்த அஜய் பட், நைனிடால் - உதம்சிங் நகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக எம்.பி., யாக பதவி ஏற்றுள்ளார்.

பி.எல்.வர்மா (வயது 60):

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ரோஹிலகாண்ட் பகுதியைச் சார்ந்தவர். சுமார் 35 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றி வரும் பி.எல்.வர்மா உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

அஜய் குமார்(வயது 60):உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆவத் பகுதியைச் சார்ந்தவர். வழக்கறிஞரான இவர் சுமார் 30 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றி வருகிறார். அதேபோல், உத்தரப்பிரதேச மாநிலத்தின் கேஹிரி மக்களவைத்தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக எம்.பி., ஆகியுள்ளார்.

செளகான் தேவுசிங் (வயது 56):குஜராத் மாநிலத்தின் கேஹ்டா பகுதியைச் சார்ந்தவர். இரண்டுமுறை குஜராத் மாநில சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த செளகான், கேஹ்டா மக்களவைத்தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக எம்.பி.ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பகவந்த் கூபா (வயது 54):

கர்நாடக மாநிலம், பிடார் பகுதியைச் சார்ந்தவர் பகவந்த் கூபா. தும்கூரில் மெக்கானிக்கல் இன்ஜினியராகப் படித்துபட்டம் பெற்ற இவர் பிடார் மக்களவைத்தொகுதியில் இரண்டாவது முறையாக எம்.பி., ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கபில் மொரேஷ்வர் பட்டீல் (வயது 60):

மகாராஷ்டிராவின் கொன்கன் பகுதியைச் சார்ந்த கபில், சுமார் 30 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றி வந்தார். பைவண்டி தொகுதியின் மக்களவை உறுப்பினராக கபில் மொரேஷ்வர் இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சுஸ்ரீ பிரதிமா பெளமிக் (வயது 52):

திரிபுரா மாநிலத்தின் அகர்தலா நகரைச் சார்ந்தவர். மிகவும் பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சார்ந்த இவர் விவசாயத்தைத்தொழிலாக மேற்கொண்டு வருகிறார். இவர் திரிபுரா மேற்குத் தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிட்டு எம்.பி., ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சுப்ஹஸ் சர்கர் (வயது 67):

மேற்கு வங்க மாநிலம் மேடினிபூர் பகுதியைச் சார்ந்த இவர் மருத்துவப் படிப்பை முடித்து சுமார் 50 ஆண்டுகளாக மக்கள் சேவையாற்றி வருகிறார். முதன்முதலாக மேற்கு வங்க மாநிலத்தின் பங்குரா என்னும் தொகுதியில் போட்டியிட்டு, மக்களவை உறுப்பினர் ஆகியுள்ளார்.

பகவத் கிருஷ்ணராவ் கரத் (வயது 64):

மகாராஷ்டிரா மாநிலத்தின் மாராத்வாடா பகுதியைச் சார்ந்த இவர் மருத்துவப்படிப்பை முடித்து அப்பகுதி மக்களுக்கு பன்னெடுங்காலமாக சேவை ஆற்றி வருகிறார். முதன்முதலாக மாநிலங்களவை உறுப்பினராகி சேவை ஆற்றி வருகிறார்.

ராஜ்குமார் ரஞ்சன் சிங் (வயது 68):

மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரைச் சார்ந்த இவர் சுமார் 40 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றி வருகிறார். புவியியல் துறை பேராசிரியரான ராஜ்குமார் முதல்முறையாக மணிப்பூரின் உள் தொகுதியில் போட்டியிட்டு, முதல்முறையாக எம்.பி., ஆகியுள்ளார்.

பாரதி பிரவீன் பவார் (வயது 42):

மகாராஷ்டிரா மாநிலத்தின் காண்டேஷ் பகுதியைச் சார்ந்த இவர் மருத்துவத்துறையில் பட்டம்பெற்று மக்கள் பணியாற்றி வந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தின் திண்டோரி மக்களவைத்தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக எம்.பி., ஆகியுள்ளார்.

பிஸ்வேஸ்வர் துடு (வயது 56):

ஒடிசா மாநிலம், கட்டாக் பகுதியைச் சார்ந்த இவர் மயூர்பாஞ்ச் பகுதியில் வசித்து வருகிறார். அரசியலுக்கு வருவதற்கு முன், குடிநீர் வடிகால் வாரியத்தில் மூத்த பொறியாளராகப் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் மயூர்பாஞ்ச் என்னும் தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆகியுள்ளார்.

சாந்தனு தாக்கூர் (வயது 38):

மேற்கு வங்க மாநிலத்தின் பிரசிடென்சி என்னும் பகுதியைச் சார்ந்த இவர் போங்கெளன் தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிட்டு, எம்.பி., ஆகியுள்ளார்

டாக்டர். முன் ஜபரா மஹேந்திரபாய் (வயது 52):

குஜராத் மாநிலம், சுரேந்திரநகர் பகுதியைச் சார்ந்த இவர் 8 லட்சம் நோயாளிகளுக்கு 2 ரூபாய்க்கு மருத்துவ சேவையினைப் புரிந்தவர். 30 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றி வரும் இவர் முதல்முறையாக சுரேந்திரநகர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆகியுள்ளார்.

ஜான் பார்லா(வயது 45):

மேற்கு வங்கத்தின் ஜல்பய்குரி பகுதியைச் சார்ந்த இவர் 20 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றி வருகிறார். இதையடுத்து அலிபுர்துர்ஸ் என்னும் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆகியுள்ளார்.

எல். முருகன் (வயது 44):

தமிழ்நாட்டின் கொங்கு மண்டலத்தைச் சார்ந்த இவர் வழக்கறிஞரும் கூட. அதுமட்டுமல்லாது தேசிய பட்டியலின ஆணையத்தின் துணைத்தலைவராக சுமார் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தவர்.

நிஷித் பிரமணிக் (வயது 35):

மேற்கு வங்கத்தின் ஜல்பய்குரி பகுதியைச் சார்ந்த இவர் முதல்முறையாக கோச் பெஹர் என்னும் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆகியுள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவில் லாம்டா கரோனா பரவல்? - நிபுணர் விளக்கம்

Last Updated : Jul 8, 2021, 4:37 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details