ராய்ப்பூர் : 90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டப் பேரவைக்கு கடந்த நவம்பர் 7 மற்றும் 17ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. கடந்த டிசம்பர் 3ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆட்சியை கைப்பற்ற 46 தொகுதிகள் பெரும்பான்மை தேவைப்பட்டதில், பாஜக 54 இடங்களை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்தை நெருங்கிய போதிலும் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு முதலமைச்சரை தேர்வு செய்வதில் கடும் இழுபறி நீடித்தது. முதலமைச்சர் ரேசில் விஷ்ணு தியோ சாய், ராமன் சிங், அருண் சாவ், ஒ.பி. சவுத்ரி, ரம்விச்சர் நெதம், சரோஜ் பாண்டே ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பாஜக இணை பொறுப்பாளரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான மன்சுக் மாண்ட்வியா தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பழங்குடியின இனத்தை சேர்ந்தவரான விஷ்ணு தியோ சாய் இதற்கு மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குன்குரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட விஷ்ணு தியோ சாய், 87 ஆயிரம் வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்த போட்டியிட்ட வேட்பாளர்களை வெற்றி கொண்டார்.
ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளராக காணப்படும் விஷ்ணு தியோ சாய், முன்னாள் முதலமைச்சர் மற்றும் பாஜக மூத்த தலைவர் ராமன் சிங்குடன் நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1964 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி விவசாய குடும்பத்தில் விஷ்ணு தியோ சாய் பிறந்தார்.
இவரது தாத்தா புத்நாத் கடந்த 1947 - 1952 காலக்கட்டங்களில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அதேபோல் இவரது பெரியப்பா நர்ஹரி பிரசாத் இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும், எம்.பியாகவும் அப்போதைய ஜன சங்க அமைப்பில் பதவி வகித்தார். சிறுவயது முதலே அரசியல் பின்புலத்துடன் வளர்ந்த விஷ்ணு தியோ சாய், தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த கையோடு அரசியலில் களம் கண்டார்.