முழு நாடும் கரோனா தொற்றோடு போராடிக்கொண்டிருக்கிறது. கரோனா இரண்டாம் அலையில் அதி தீவிரமாகப் பரவும் நிலையில், கரோனா நோயாளிகளுக்கு மருந்து, ஆக்சிஜன் போன்றவை கிடைப்பதிலிருந்து, மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது வரை அனைத்திலும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. குஜராத் போன்ற சில வடமாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் ஆக்சிஜன் தயாரித்து பிற மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கிறது. இந்த நெருக்கடியான சூழலில், ஆக்சிஜன் மட்டுமில்லாது இந்தியாவின் பாதிக்கப்பட்ட மாநிலங்களான டெல்லி, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்களையும் வழங்குகின்றது.
சத்தீஸ்கரிலும் கரோனா எண்ணிக்கை அதிகமாக இருந்தபோதிலும், அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. கடந்த ஏப்ரல் 11 முதல் 24ஆம் தேதிவரை இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு சுமார் 2706.95 மெட்ரிக் டன் ஆக்சிஜனை சத்தீஸ்கர் வழங்கியுள்ளது.
இங்கு ஒவ்வொரு நாளும் சுமார் 386.92 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜன் தயாரிக்கப்படுகிறது. இதில் அம்மாநிலத்திலுள்ள 5,898 கரோனா நோயாளிகளின் தேவையான 160 மெட்ரிக் டன் தவிர, மற்றவை வெளிமாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றது.