ஃபிரோசாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம், ஃபிரோசாபாத்தில் உள்ள தன்னாட்சி மருத்துவக் கல்லூரியில், முதலாம் ஆண்டு படித்த சைலேந்திர சங்க்வார்(21) என்ற மாணவருக்கு நேற்று(நவ.3) தேர்வு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால், மாணவர் தேர்வறைக்கு வரவில்லை.
இதனால், கல்லூரி ஊழியர்கள் விடுதிக்குச்சென்று பார்த்தபோது, மாணவரின் அறை உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மாணவர் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச்சென்ற போலீசார் மாணவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கல்லூரி நிர்வாகத்தின் தொந்தரவு காரணமாகவே, தனது மகன் தற்கொலை செய்து கொண்டதாக சைலேந்திர சங்க்வாரின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அதேபோல், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்தும், மாணவரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டம் சுமார் 4 மணி நேரம் நீடித்ததாகத் தெரிகிறது.