டெல்லி:இந்திய கடற்படையில் கமாண்டராக பணியாற்றிய பிர்னந்து திவாரி உள்பட 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள், தனியார் நிறுவனத்தின் சார்பில் கத்தார் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு போர் பயிற்சி அளித்து வந்தனர்.
அப்போது, கத்தார் ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததாக கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 பேரையும் கத்தார் பாதுகாப்புப் படை கைது செய்தது. இந்த 8 நபர்களும் ஜாமீன் கேட்டு பலமுறை மனுத்தாக்கல் செய்த போதும், அதை நிராகரித்த கத்தார் நீதிமன்றம், 8 பேரையும் காவலில் வைத்து விசாரணை நடத்தி வந்தது.
இதனையடுத்து, முன்னாள் இந்திய கடற்படை கமாண்டர் பிர்னந்து திவாரி உள்பட 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும், 8 பேரின் மரண தண்டனைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து இருந்தது.
தொடர்ந்து 8 பேரின் மரண தண்டனையை எதிர்த்து, கடந்த மாதம் கத்தார் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை கத்தார் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதனையடுத்து, இன்று (டிச.28) மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 8 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கத்தார் நீதிமன்றம் குறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், கத்தாரில் உள்ள இந்தியத் தூதர், இந்திய அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் மத்திய வெளியுறவுத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீடு விசாரணையின்போது நீதிமன்றத்தில் இருந்தனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் என இந்திய வெளியுறவுத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தார் நீதிமன்றத்தின் விரிவான தீர்ப்பிற்காக காத்திருப்பதாகவும், சட்டக்குழு மூலம் முழு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெளியுறவுத் துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:இஸ்ரேல் தூதரகம் அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பு.. இருவர் மீது திரும்புகிறதா விசாரணை?