டெல்லி:ராணி இரண்டாம் எலிசெபத் கடந்த மாதம் காலமானார். அப்போது அடுத்த மன்னர் யார்? ராணி அணிந்திருந்த விலைமதிப்பற்ற கோஹினூர் வைரம் பதித்த கிரீடம் யாருக்கு? என்பது தொடர்பான பல்வேறு விவாதங்கள் எழுந்தன. கோஹினூர் வைரம் இந்தியாவுக்கு சொந்தமானது என்றும், ஆங்கிலேயே படையெடுப்பின்போது இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இதனால், கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என இந்தியர்கள் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஏராளமானோர் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று(அக்.14) டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது கோஹினூர் வைரத்தை மீட்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "இந்த கேள்விக்கு மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பே நாடாளுமன்றத்தில் பதிலளித்தது. கோஹினூர் வைரம் குறித்து இங்கிலாந்து அரசாங்கத்திடம் அவ்வப்போது கேள்வி எழுப்பி வருகிறோம். அதனை மீட்டு வருவதற்கான வழிகளை தொடர்ந்து ஆராய்வோம்" என்று கூறினார்.