டெல்லி :முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேருக்கு கத்தார் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இந்திய கடற்படையில் கமாண்டராக பணியாற்றிய பிர்னந்து திவாரி உள்பட 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள், அல் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் அண்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில் கத்தார் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு போர் பயிற்சி அளித்து வந்தனர்.
இந்நிலையில், கத்தார் ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர்கள் 8 பேரையும் கத்தார் பாதுகாப்பு படை கைது செய்தது. ஜாமீன் கேட்டு பலமுறை மனுத் தாக்கல் செய்த போதும், அதை நிராகரித்த கத்தார் நீதிமன்றம் 8 பேரையும் தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில், முன்னாள் இந்திய கடற்படை கமாண்டர் பிர்னந்து திவாரி உள்பட 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்களுக்கு மரண தண்டனை விதித்தது அதிர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரித்து உள்ளது.
முன்னாள் வீரர்கள் குடும்பத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், விரைவில் 8 பேரின் மரண தண்டனைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, கத்தார் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்து உள்ளார்.
மேலும், எட்டு பேரின் குடும்பத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 8 பேரின் குடும்பத்தினரை சந்தித்து பேசியதாகவும் கூறினார். அனைத்து வகையிலான சட்ட உதவிகள் மற்றும் தூதரக உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், தீர்ப்பு குறித்த விவரங்கள் சட்ட நிபுணர்களிடம் வழங்கப்பட்டு, தூதரக ரீதியிலான உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க :ஃபைபர்நெட் ஊழல்; சந்திரபாபு நாயுடு கைது நடவடிக்கைக்கான தடை நீடிப்பு!