டெல்லி : பெண் பாகிஸ்தான் உளவாளிக்கு ரகசிய தகவலை பகிர்ந்ததாக கூறி மத்திய வெளியுறவு அமைச்சக பணியாளரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் பால். மத்திய வெளியுறவு அமைச்சகத்தில் பண்முக ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மத்திய வெளியறவு அமைச்சம் தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு நவீன் பால் வழங்கியதாக கூறப்படுகிறது.
கிராஸ் ரிபப்ளிக் பகுதியில் வசித்து வரும் நவீன் பாலுக்கு அஞ்சலி என்ற பெயரில் பெண் ஒருவர் அறிமுகமானதாகவும், வாட்ஸ் அப் மூலம் இருவரும் பேசிக் கொண்டு இருந்த நிலையில், அந்த பெண் விரித்த வலையில் நவீன் பால் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாடு உள்பட ரகசியம் என ஆவணப்படுத்தப்பட்ட ஆவணங்களை பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு நவீன் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
நவீன் பாலின் மொபைல் போனில் ரகசியம் என பெயரிடப்பட்ட தகவல்கள் மற்றும் முக்கிய ஆவணங்களின் ஸ்க்ரீன் ஷாட் படங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஆவணங்களுக்கு பதிலாக சந்தேகத்திற்குரிய எண்ணில் இருந்து பரிவர்த்தணைகளை நவீன் பால் பெற்று உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.