டெல்லி:250 வார்டுகளை கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த டிசம்பர் மாதம் 4-ந்தேதி மாநகராட்சி தேர்தல் நடந்தது. தேர்தலில் 134 இடங்களை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி 15 ஆண்டுகளாக பாஜக கைவசம் இருந்த மாநகராட்சியை தன் வசம் கொண்டு வந்தது. பாஜகவுக்கு 104 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.
இதையடுத்து கவுன்சிலர்கள் பதவியேற்றதும் மேயர் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. மேயர், துணை மேயர் பதவிகளுக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி மற்றும் பாஜக கட்சிகள் அறிவித்தன. மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் நடத்துவதற்கு முன்னதாக மாநகராட்சியின் தற்காலிக சபாநாயகராக பா.ஜ.க.வின் சத்ய சர்மா நியமிக்கப்பட்டது மற்றும் அரசை ஆலோசிக்காமல் 10 நியமன கவுன்சிலர்களை நியமித்தது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக துணை நிலை ஆளுநர் சக்சேனா மற்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இடையே மோதல் போக்கு நிலவியது.
இதன் காரணமாக மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் வார்டு உறுப்பினர்களின் தொடர் அமளியால் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே டெல்லி மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, டெல்லி மேயர் தேர்தலில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாதவாறு உத்தரவு பெற்றது.
இந்த உத்தரவை தொடர்ந்து டெல்லி மேயர் தேர்தலை நேற்று (பிப்.22) நடைபெற்றது. தேர்தலில் மொத்தம் 266 வாக்குகள் பதிவாகின. இதில், 150 வாக்குகள் பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ஷெல்லி ஒபராய் மேயராக தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரேகா குப்தா 116 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.