டெல்லி:இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2014-16ஆம் ஆண்டுகளில் 1 லட்சம் குழந்தை பிறப்புக்கு 130 என்ற அளவில் இருந்த பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம் 2018-20 காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவாக 97 என குறைந்துள்ளது. மாதிரி புள்ளிவிவர பதிவு அடிப்படையில், 2014-16ஆம் ஆண்டில் பேறுகால இறப்பு 130ஆகவும், 2015-17ஆம் ஆண்டு காலகட்டத்தில் 122-ஆகவும், 2016-18 காலகட்டத்தில் 113ஆகவும், 2017-19 காலகட்டத்தில் 103ஆகவும், 2018-20ஆம் காலகட்டத்தில் 97ஆகவும் குறைந்துள்ளது.
தேசிய சுகாதாரக் கொள்கையின் அடிப்படையில், 1 லட்சம் பிறப்புகளுக்கு பேறுகால இறப்பை 100-க்கும் கீழ் குறைக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதை இந்தியா எட்டியுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் குழந்தை பிறப்புகளுக்கு பேறுகால இறப்பை 70-க்கும் கீழ் குறைக்க வேண்டும் என்ற இலக்குடன் இந்தியா தற்போது செயல்படுகிறது. நீடித்த வளர்ச்சி இலக்கை எட்டி மிகச்சிறப்பான முறையில் செயல்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை தற்போது 6-லிருந்து 8-ஆக அதிகரித்துள்ளது. இந்த மாநிலங்களில் சராசரியை விட குறைவான பேறுகால இறப்பு விகிதம் உள்ளது. அதன்படி கேரளா 19, மகாராஷ்டிரா 33, தெலங்கானா 43, ஆந்திரா 45, தமிழ்நாடு 54, ஜார்க்கண்ட் 56, குஜராத் 57, கர்நாடகா 69 என்ற அளவில் பேறுகால இறப்பு விகிதம் உள்ளது.