மும்பை: மும்பையில் உள்ள கோரேகான் மேற்குப் பகுதியில் உள்ள ஜெய்பவானி கட்டடத்தில் இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து, 8 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த தீ விபத்தில் சுமார் 30 வாகனங்கள் வரை எரிந்து தீக்கிரையானது. சுமார் 30 நபர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அதாவது, இந்த ஜெய் பவானி கட்டடம் ஏழு மாடிகளைக் கொண்டது ஆகும்.
தற்போது இதை 2ஆம் கட்ட தீவிபத்து எனவும், இந்த தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும், உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும், தீ விபத்தில் சிக்கிய 30க்கும் மேற்பட்ட நபர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 31 பேர் காயமடைந்துள்ளதாகவும், அதில் 14 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர்களை மீட்ட தீயணைப்புத் துறையினர் உடனடியாக அருகில் இருந்த மும்பையின் ட்ராமா கேர் மற்றும் கூப்பர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, இந்த தீ விபத்துக்கு தரைதளத்தில் அமைந்திருந்த ஒரு சில கடைகளும், அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களும் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.