தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 30, 2023, 10:48 PM IST

ETV Bharat / bharat

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட வெடிபொருட்கள்... பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!

கேரள மாநிலம் காசர்கோடு அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பயங்கர வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Explosives
வெடிபொருட்கள்

காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கெட்டும்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், மனநோய்க்கான மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கலால்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று அதிகாரிகள் சோதனை செய்த போது, பயங்கர வெடிபொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கெட்டும்கல் பகுதியை சேர்ந்த முஸ்தபா என்பவரது வீட்டில், கலால்துறை அதிகாரிகள் இன்று (மே 30) அதிகாலை 3 மணியளவில் சோதனை செய்தனர். வீடு மற்றும் அவரது காரில் சோதனை செய்த போது வெடிபொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 2,150 டெட்டனேட்டர்கள், 13 பெட்டிகளில் இருந்த 2,800 ஜெலட்டின் குச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் முஸ்தபாவை அடூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களும், காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, முஸ்தபா கைது செய்யப்பட்டார். போலீசார் அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதற்கிடையே கையில் வைத்திருந்த பிளேடால் தனது கை நரம்புகளை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை போலீசார் காசர்கோடு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் முஸ்தபாவிடம் விசாரணை நடத்திய போது, கர்நாடகாவில் உள்ள குவாரிக்கு அனுப்புவதற்காக வெடிமருந்துகளை வைத்திருப்பதாக கூறினார். ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில், முஸ்தபா கூறிய இடத்தில் குவாரி ஏதும் இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் அவர் மீது வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், வெடிமருந்துகளை எங்கிருந்து வாங்கினார் என்பது குறித்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதேபோல் கடந்த திங்கள்கிழமை பாலக்காடு மாவட்டம் வாளையார் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, 200 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சதீஷ், லிசன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். வெடிபொருட்களை கடத்த முயன்ற போது இருவரும் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அரசு கொடுத்த சீர்வரிசையில் கருத்தடை மாத்திரை... அதிர்ந்து போன மணமக்கள்!

ABOUT THE AUTHOR

...view details