டெல்லி: டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் சத்யேந்தர் ஜெயின் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. சிறையில் சத்யேந்தர் ஜெயினுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுத்த புகாரில், திகார் சிறை கண்காணிப்பாளர் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதனிடையே திகார் சிறையில் சத்யேந்தர் ஜெயினுக்கு நபர் ஒருவர் மசாஜ் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், ஜெயின் படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும்போது, நபர் ஒருவர் அவருக்கு முதுகு மற்றும் காலில் மசாஜ் செய்கிறார். பின்னர், ஜெயின் தனது அறையில் படுத்துக்கொண்டே பார்வையாளர்களைச் சந்திக்கிறார். அவரது அறையில் மினரல் வாட்டர் பாட்டில்கள், நாற்காலி, ரிமோட் உள்ளிட்டவை இருப்பதையும் பார்க்க முடிகிறது.
ஆனால், சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்யப்படவில்லை என்றும், அது பிசியோதெரபி சிகிச்சை என்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். அவருக்கு முதுகுத்தண்டில் பிரச்னை இருப்பதாகவும், அதற்காக சிறையில் நடக்கும் பிசியோதெரபி அமர்வில்தான் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் கெஜ்ரிவால் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் ரிங்கு என்ற சிறைக்கைதி என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக போக்சோ வழக்கில் கைதான ரிங்குதான் மசாஜ் செய்தார் என்றும், சிறையில் இதுபோன்ற சிகிச்சை ஏதும் அளிக்கப்படுவதில்லை என்றும் சிறைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.