இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகிவருகிறது. அதுமட்டுமின்றி, அவர்களை கைது செய்து படகுகளையும் அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்துவருகின்றனர். நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரில், தமிழ்நாட்டு எம்பிக்கள் மீனவர்கள் விவகாரம் தொடர்பாக மத்திய அரசை கேள்விகளால் துளைத்தெடுத்துவருகின்றனர்.
இலங்கைக் கடற்படைக் கப்பல் மோதித் தகர்த்த மீனவர்களின் படகில், எத்தனைப் பேர் இறந்தனர்? அதற்கு, இந்திய அரசு ஆற்றிய எதிர்வினை என்ன? கடுமையான எதிர்ப்பு தெரிவித்தீர்களா? இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்தீர்களா? திட்டமிட்டு, தமிழ்நாடு மீனவர்களைப் படுகொலை செய்த அவர்களிடம் இருந்து, இழப்பு ஈட்டுத் தொகை ஏதும் கோரி இருக்கின்றீர்களா? என மாநிலங்களவையில் வைகோ அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
அதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளிக்கையில், " 2021 ஜனவரி 18 ஆம் நாள், இலங்கைக் கடற்படைக் கப்பலுக்கும், இந்திய மீனவர்களின் மீன்பிடிப் படகுக்கும் இடையே நடந்த மோதலில், நான்கு மீனவர்கள் இறந்தனர்.
இது தொடர்பாக, நமது கடுமையான கண்டனத்தை, இலங்கையில் உள்ள இந்தியத் தூதர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளார். அதேபோல, டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரிடமும் கடுமையான கண்டனம் தெரிவித்து இருக்கின்றோம்.
உயிர்களை இழந்தது குறித்த நமது வேதனையைத் தெரிவித்ததுடன், மீனவர்களின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு, அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருக்கின்றோம்.
இந்திய மீனவர்களின் பாதுகாப்பு குறித்து, அரசு ஆகக்கூடுதலான அக்கறை கொண்டுள்ளது. மீனவர்கள் யாரேனும் சிறைப்பிடிக்கப்பட்ட தகவல் கிடைத்தால், உடனடியாக அதுகுறித்து, இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்; தூதரகங்களின் வழியாக அவர்களை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றோம்.