லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தயல்பாக் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக இருப்பவர் கருணா சவுகான். இவர் கடந்த ஆண்டு மார்ச் 10ஆம் தேதி இந்திய கடற்படை லெப்டினன்ட் அலுவலராக பணியாற்றி வந்த தர்மேந்திர சிங் சவுகானை திருமணம் செய்தார்.
திருமணமான சில நாள்களிலேயே பணிக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தர்மேந்திர சிங் தள்ளப்பட்டார். ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா கப்பலில் பணி நிமித்தமாக சென்று கொண்டிருந்த இவர், கர்நாடகாவின் கார்வார் துறைமுகத்தை அடைவதற்கு சற்று முன்னதாக கப்பல் தீப்பிடித்து உயிரிழந்தார். அப்போது அவருக்கு திருமணமாகி 40 நாள்கள் மட்டுமே நிறைவடைந்திருந்தன.
கணவரின் மரண செய்தியால் கருணா சுக்குநூறாக உடைந்திருந்தாலும், நாட்டிற்காக பணியாற்றிய போதே அவர் உயிர் பிரிந்தது என பெருமை கொள்ளவும் செய்தார்.
அனைவரைப் போலவும் திருமண வாழ்க்கையில் பல கனவுகளை சுமந்துகொண்டிருந்த கருணா, தனது தாய் மற்றும் கணவரின் தாயாரின் ஆறுதலான வார்த்தைகளால் சற்றே இளைப்பாறினார்.
சில நாட்களுக்குப் பின், ரட்லாம் மாவட்ட சைனிக் நல அமைப்பின் தலைவர் கேப்டன் இர்பான் கான் கருணாவை ராணுவத்தில் சேருமாறு ஊக்கமளித்தார். அவரது அறிவுரைகளால் மனமாற்றம் அடைந்த கருணா, இந்தூரில் உள்ள நெருங்கிய குடும்ப நண்பரான கர்னல் நிகில் திவானிடம் கருத்துகளைக் கேட்டு, பின் அவரது வழிகாட்டுதலின் கீழ் அவர் ராணுவ நேர்காணலுக்குத் தயாரானார்.
'வீர் நரி' விதியின் கீழ், ஆயுதப்படைகளில் உள்ள தியாகிகளின் மனைவிகள் எழுத்துத் தேர்வுக்கு வரத் தேவையில்லை என்றும், ஒரு நேர்காணலுக்கு மட்டும் அழைக்கப்பட்டதாகவும் கூறிய கருணா, 2019 டிசம்பரில் இந்திய ராணுவத்தின் நேர்காணலில் தோல்வியடைந்தார்.
இருப்பினும், நம்பிக்கையை இழக்காமல் இரண்டாவது முறை முயற்சி செய்தார். அதில் வெற்றியும் பெற்றார். 2021 ஜனவரி 7 ஆம் தேதி கருணா 11 மாத ராணுவப் பயிற்சிக்காக சென்னைக்கு செல்லவுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தர்மேந்திர சிங்கின் தாயார் டினா குன்வர் சவுகான், "எனது மருமகளை நினைத்து மிகவும் பெருமிதம் கொள்கிறேன். அவர் ராணுவத்தில் இணையவுள்ளதாக கூறியதற்கே நெகிழ்ச்சி அடைந்தேன். எனது மகனுக்குப் பிறகு, எனது மருமகள் நாட்டிற்கு சேவை செய்வார்" என்றார்.
இதையும் படிங்க: எல்லைப் பாதுகாப்பில் தயார் நிலையில் உள்ள ராணுவம்: தலைமை தளபதி ராவத்