பெங்களூரு:கர்நாடக மாநிலம் மங்களூருவிலுள்ள சுல்யா பகுதியிலிருந்து பனத்துரு பகுதிக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக தனியார் நிறுவனத்தின் பேருந்து ஒன்று முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பேருந்து திருமண வீட்டாருடன் பனத்துரு பகுதிக்கு அருகில் சென்றுகொண்டிருந்தது. அப்போது வாகனத்தை ஓட்டுநர் திருப்பியபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கள்ளப்பள்ளி பகுதியில் விபத்திற்குள்ளானது.
இதில், வீட்டின் மீது பேருந்து மோதியதில், ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்திலிருந்த பலர் பலத்த காயங்களுடனும், சிலர் லேசான காயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.