டெல்லி:மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் மாவோயிஸ்ட்களின் தலைவன் கைது செய்யப்பட்டதையடுத்து நாடு முழுவதும் மாவோயிஸ்ட்கள் குறித்து முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளன. இது குறித்து முதற்கட்ட விசாரணையில் இடதுசாரி கிளர்ச்சியாளர்களான மாவோயிஸ்ட்கள் அவர்களின் இடத்தை அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலப்பகுதிகளுக்கு மாற்ற இருப்பதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
நேற்று(செப்-19) இரவு, மேற்கு வங்காளத்தில் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கல்யாணி விரைவுச்சாலை பகுதியில் மூத்த மாவோயிஸ்ட் தலைவரான சாம்ராட் சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டார். மேலும் கடந்த சில மாதங்களில் தேசியப் புலனாய்வு முகமையால் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகளால் இந்த இடமாற்றம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 37 வயதான மாவோயிஸ்ட் தலைவர் சாம்ராட் சக்ரவர்த்தி மேற்கு வங்கத்தில் சிபிஐ (எம்) கட்சியின் உறுப்பினராக இருந்தவர்.
உள்துறை அமைச்சகத்திடம் என்ஐஏ சமர்ப்பித்த முதல் அறிக்கையில், "மாவோயிஸ்ட்கள் அஸ்ஸாமின் பாரக் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் உள்ள கச்சார் மற்றும் கரீம்கஞ்ச் மாவட்டங்களின் சில பகுதிகளில் தங்கள் தளங்களை உருவாக்க முயற்சிக்கின்றனர். மேலும் அவர்கள் திப்ருகார், கோலாகாட் உள்ளிட்ட மேல் அஸ்ஸாமின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளிலும் தளங்களை உருவாக்க முயற்சிக்கின்றனர்’ எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மார்ச் 6 அன்று சிபிஐ (எம்) தலைவரும், அதன் மத்தியக் குழு உறுப்பினருமான அருண் குமார் பட்டாச்சார்ஜி உதர்பாண்ட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேயிலை தோட்டத்தில் இருந்து, அவரது கூட்டாளிகளில் ஒருவரான ஆகாஷ் ஒராங் என்கிற ராகுல் என்பவருடன் கைது செய்யப்பட்டார்.
என்ஐஏ அறிக்கை:என்ஐஏ உள்துறை அமைச்சகத்திடம் அளித்த அறிக்கையில், ‘அஸ்ஸாம் மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்ச்சியாக வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மாவோயிஸ்ட்கள் நாட்டின் பிற பகுதிகளில் புதிய தளங்களைத் தேடி வருகின்றனர் எனக்குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியா முழுவதும் குறிப்பாக ஜார்க்கண்ட், பீகார், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் பல மாநிலங்களில் பாதுகாப்பு ஏஜென்சிகளால் மாவோயிஸ்ட்களுக்கு எதிரான பாரிய எதிர்ப்பு நடவடிக்கையைத்தொடர்ந்து இந்த இடமாற்றம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது’ எனக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் மூத்த அலுவலர் ஒருவர் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், ‘மாவோயிஸ்ட்களின் வளர்ச்சி தொடர்பாக அஸ்ஸாம் மாநில அரசுடன் தொடர்புகொண்டு உள்ளோம். மேலும் அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கில் மாவோயிஸ்ட்களின் வளர்ச்சி ஒரு ஆபத்தான அறிகுறியாகும். ஏனெனில் இது அவர்களுக்கு அண்டை நாடுகளுக்கு எளிதாக செல்லக்கூடிய வாய்ப்பைக் கொடுக்கும். இதனால், அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வது எளிதாக இருக்கும்’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பைக்கில் லிஃப்ட் கொடுத்தவரை ஊசிபோட்டு கொன்ற கும்பல் - கொலைகாரர்களைத் தேடும் போலீஸ்