பாட்னா:தமிழ்நாட்டில், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ போலியானது என தமிழக காவல் துறை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. மேலும் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை காவல் துறை அதிகாரிகள் உறுதிபடுத்தினர். மேலும் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கருதினால் புகார் அளிக்கலாம் என காவல் துறை தரப்பில் புகார் எண்கள் வெளியிடப்பட்டன.
மேலும் மாவட்டந்தோறும் உள்ள தொழில் துறை நிறுவனங்களில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களை, நேரில் சென்று சந்தித்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர், அவர்களுக்கு புரியும் வகையில் இந்தி மொழியில் அறிவிப்புகளை வெளியிட்டனர். மேலும் வடமாநில தொழிலாளர்கள் பாதுகப்பு குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
மறுபுறம் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பீகார் சட்டமன்றத்தில் எதிரொலித்த நிலையில், நேரில் சென்று ஆய்வு செய்யுமாறு பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் சிறப்பு குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைத்தார். தமிழகம் வந்த சிறப்புக் குழு பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை நேரில் சந்தித்து பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து கேட்டறிந்தது.