மகாராஷ்டிர மாநிலம் மும்பை அல்டாமவுண்ட் சாலையில் உள்ள ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே, வாகனம் ஒன்று வெடிபொருள்களுடன் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வாகனத்தில் 20 ஜெலட்டின் குச்சிகளுடன் மிரட்டல் கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தானேவில், அந்தக் காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரெனின் உடலை காவல் துறையினர் மார்ச் 5ஆம் தேதி கண்டெடுத்தனர்.
இதையடுத்து இவ்விவகாரம் தீவிரமடையவே வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கையிலெடுத்தது. இறந்த மன்சுக்கின் மனைவியை என்ஐஏ விசாரித்ததில், காரை காவல் ஆய்வாளர் சச்சின் வாஸ் நான்கு மாதங்கள் கடன் வாங்கியிருந்ததாகவும், அதனை பிப்ரவரி 5ஆம் தேதிதான் திருப்பி அளித்ததாகவும் அவர் கூறியதாகத் தெரியவந்துள்ளது.
பிப்ரவரி 17இல் அந்தக் கார் திருடப்பட்ட நிலையில், பிப்ரவரி 25 அன்று வெடிபொருள்களுடன் அம்பானியின் வீட்டருகே கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவத்தில் தொடர்பிருப்பதாகக் கூறி காவலர் சச்சின் வாஸை என்ஐஏ கைது செய்தது. கைதான காவலரை அம்மாநில காவல் துறை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதற்கிடையே, அம்பானிக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பில் குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மும்பை காவல் ஆணையராக இருந்த பரம்பீர் சிங் பணியிட மாற்றம்செய்யப்பட்டார்.
இதனிடையே, பரம்பீர் சிங் அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எட்டு பக்க கடிதத்தை எழுதியுள்ளார். அதில், மாதந்த்தோறும் தன்னை நூறு கோடி ரூபாய் வசூல் செய்து தன்னிடம் கொடுக்கும்படி உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வற்பறுத்தியதாகவும், தான் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டி பகிரங்கக் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை என உள்துறை அமைச்சர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மன்சுக் ஹிரென் உயிரிழந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை இருவரை விசாரணை காவலில் எடுத்தது. தற்போது, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பை காவலர் விநாயக் ஷிண்டே, சூதாட்டக்காரரான நரேஷ் தாரே ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். முன்னதாக, மார்ச் 19ஆம் தேதி, 25 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியது. அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.