டெல்லி:பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று, 'மனதின் குரல்' (மன்-கி-பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் உரையாற்றி வருகிறார். 100-வது மனதில் குரல் நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி ஒலிபரப்பானது.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் 104-வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 27) நடைபெற்றது. அதில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, சந்திரயான்-3 திட்டத்தில் பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பைப் பாராட்டினார்.
உரையில் பிரதமர் கூறும்போது, "சந்திரயான்-3 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி மூன்று நாட்களுக்கும் மேல் ஆகிறது. இந்த வெற்றி மிகப்பெரியது, அதனால் இந்த வெற்றியைப் பற்றி எவ்வளவு பேசினாலும் அது குறைவாகவே தெரிகிறது. எல்லா சூழ்நிலைகளிலும் வெற்றி பெற விரும்பும் நமது புதிய இந்தியாவின் அடையாளமாக சந்திரயான்-3 திட்டம் உள்ளது. பெண்களின் ஆற்றலைப் பயன்படுத்தினால் சாத்தியமற்ற விஷயங்கள் கூட சாத்தியமாகும். அதற்கு சந்திரயான்-3 திட்டமும் ஒரு சான்று. இத்திட்டத்தில் பல பெண் விஞ்ஞானிகள் மற்றும் பெண் பொறியியலாளர்கள் நேரடியாகப் பணியாற்றி உள்ளனர்" என்று கூறினார்.
முன்னதாக நேற்று பிரதமர் மோடி பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு சென்றார். அங்கு, இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்பட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக் கூறினார். கரவொலி எழுப்பி விஞ்ஞானிகளை பாராட்டினார். பெண் விஞ்ஞானிகள் அனைவரையும் சந்தித்துப் பேசி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். அதன் பிறகு விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, "இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதானவை. இம்முறை சந்திரயான் தரையிறங்கியபோது நான் தென்னாப்பிரிக்காவில் இருந்தேன். ஆனால், என் மனம் முழுவதும் இஸ்ரோவில்தான் இருந்தது. அதனால், நாடு திரும்பியதும் உடனடியாக உங்களை சந்திக்க வேண்டும் என நினைத்தேன். ஆகஸ்ட் 23ஆம் தேதி இந்தியா நிலவில் கால் பதித்துள்ளது. அந்த நாள் ஆண்டுதாறும் 'தேசிய விண்வெளி தினம்' ஆக கொண்டாடப்படும். உங்களது பெரிய உழைப்பிற்கு பாராட்டுக்கள். சந்திரயான்-3 திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த பெண் விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுக்கள்" என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: Mann Ki Baat : 100வது எபிசோடில் பிரதமர் மோடி உரை - தமிழ்ப் பெண்களை நினைவுகூர்ந்த மோடி!