டெல்லி: மதுபானக் கொள்கை முறைகேட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் அமலாக்கத்துறை காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு, சிபிஐ சம்மன் அனுப்பியது.
தொடர்ந்து நடந்த விசாரணையில் மணீஷ் சிசோடியாவை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் அவரை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அதே மதுபானக்கொள்கை முறைகேட்டு வழக்கை விசாரித்து அமலாக்கத்துறை மணீஷ் சிசோடியாவை, பண மோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரித்தது.
மணீஷ் சிசோடியாவிடம் கூடுதல் விசாரணை நடந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மனுத் தாக்கல் செய்த நிலையில், 7 நாட்கள் அவரை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில், மணீஷ் சிசோடியாவின் அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிவடைகிறது.
இதையடுத்து அவரை ரோஸ் அவென்யூவில் உள்ள நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். வழக்கு தொடர்பாக கூடுதல் விசாரணை நடத்த உள்ளதாகவும், மணீஷ் சிசோடியாவின் காவலை நீட்டிக்கக் கோரியும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மணீஷ் சிசோடியாவின் அமலாக்கத்துறை காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், குடும்பச் செலவுகளுக்காக 40 ஆயிரம் ரூபாய் மற்றும் மனைவியின் மருத்துவச் செலவுகளுக்காக 45 ஆயிரம் ரூபாய் என காசோலைகளில் மணீஷ் சிசோடியா கையெழுத்திட நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த வழக்குத் தொடர்பாக நீதிமன்றத்தில் 13 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை தாக்கல் செய்து உள்ளது.
மேலும் இந்த வழக்கில் டெல்லி அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் உள்பட 11 பேரை கைது செய்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்பட 5 அதிகாரிகள் மீது சிபிஐ புதிதாக வழக்குப்பதிவு செய்து உள்ளது.
டெல்லியில் அரசு புதிதாக உருவாக்கிய ரகசிய தகவல் பிரிவை (Feedback Unit FBU), ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் உளவு வேலைகளுக்காக துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா பயன்படுத்திக் கொண்டதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி சுகேஷ் குமார் ஜெயின், ஓய்வுபெற்ற சிஐஎஸ்எப் டிஐஜி ராகேஷ் குமார் சின்ஹா உள்பட அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதில் ராகேஷ் குமார் சின்ஹா, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறப்பு ஆலோசகராகவும், ரகசியத் தகவல் பிரிவின் கூடுதல் இயக்குநராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:வரும் மார்ச் 20ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வுமையம்