மணிப்பூர்:மணிப்பூரில் வாழும் மெய்தீஸ் சமூகத்தினரை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே 3ஆம் தேதி, மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர்கள் அமைப்பு சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணிக்கு எதிராக மெய்தீஸ் உள்ளிட்ட பெரும்பான்மை சமூகத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பல இடங்களில் கலவரம் வெடித்தது. வீடுகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அன்று முதல் இரண்டு மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த வன்முறைகளில் 150க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
கலவரம் நடந்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 50 ஆயிரம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள சவோம்பங் பகுதியில் நேற்று (ஜூலை 15) மாலை மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவரது வீட்டிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.