டெல்லி:மணிப்பூர் மாநிலத்தில் வசித்து வரும் மைத்தேயி சமூக மக்கள், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதற்கு குக்கி சமூக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு சமூக மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன் பயங்கர வன்முறை வெடித்தது.
இதில் 98 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து அண்மையில் மணிப்பூர் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மக்கள் அமைதி காக்கும்படி வலியுறுத்தினார்.
இந்நிலையில் வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட விசாரணை ஆணையத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்து உள்ளது. கவுகாத்தி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையிலான குழுவில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் ஹிமன்சு சேகர் தாஸ், அலோகா பிரபாகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதற்கிடையே டிவிட்டரில் பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "இம்பால் - திமாபூர் நெடுஞ்சாலையில் போடப்பட்டுள்ள தடுப்பு வேலிகளை பொதுமக்கள் அகற்ற வேண்டும். தடுப்புகளை அகற்றினால் தான் உணவு, மருந்து, பெட்ரோல்/டீசல் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல முடியும். சமூக நல அமைப்புகள் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே, இயல்பு நிலையை கொண்டு வர முடியும்" என கூறியுள்ளார்.