எரேண்ட்ரோ கைது:
மாட்டுச் சாணம், கோமியம் உள்ளிட்டவை கரோனாவை குணப்படுத்த வல்லவை என முன்னதாகக் கருத்து தெரிவித்திருந்த மணிப்பூர் பாஜக தலைவரான திகேந்திர சிங், தொடர்ந்து கரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் முன்னதாக கடந்த மே 13ஆம் தேதி கரோனாவுக்கு மாட்டுச் சாணமும், கோமியமும் மருந்தல்ல என எரேண்ட்ரோ பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், ஒன்றிய பாஜக அரசை விமர்சிக்கும் வகையில் இவரது கருத்து அமைந்திருந்ததாகக் கூறி, பாஜகவினரின் புகாரின் அடிப்படையில், தேச விரோத சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு எரேண்ட்ரோ சிறையில் அடைக்கப்பட்டார்.
எரேண்ட்ரோவின் தந்தை மனு தாக்கல்:
இதனைத் தொடர்ந்து முன்னதாக எரேண்ட்ரோவின் தந்தை அவரது கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில் ”மக்கள் எழுச்சி மற்றும் நீதி கூட்டணியின் அங்கம் வகிப்பவரும், சமூக ஆர்வருமான தனது மகன் எரேண்ட்ரோவை உடனடியாக விடுவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும். மனுதாரர் ஆகிய தனக்கும் தனது மகனுக்கும் இந்த வழக்கு தொடர்பாக ஏற்பட்ட செலவு, தவறுதலாக வழங்கப்பட்ட தண்டனை ஆகியவற்றுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
எரேண்ட்ரோ விடுதலை:
இந்த வழக்கு இன்று (ஜூலை.19) நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட் எம் ஆர் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், மாலை 5 மணிக்குள் எரேண்ட்ரோவை விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
மேலும் எரேண்ட்ரோவை விடுவிக்காமல் தொடர்ந்து நீதிமன்றக் காவலில் வைத்திருப்பது அவரது அடிப்படை உரிமையை வழங்க மறுக்கும் செயல் என்றும், இன்னும் ஒரு இரவு கூட அவர் சிறையில் அடைக்கப்படக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
முன்னதாக மக்களை மௌனம் அடையச் செய்வதற்கும் மக்கள் உதவி கோருவதற்கு எதிராகவும் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் கடுமையாக எதிர்த்ததோடு, இதுபோன்ற நடவடிக்கைகள் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் எனவும் தெரிவித்திருந்தது.
மேலும், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகும் தேசவிரோதச் சட்டம் தேவையா எனவும் உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காலக்கெடு முடிவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக இன்று மாலை 4.45 மணிக்கு எரேண்ட்ரோ விடுவிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: 'ஒன்றிய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை' - அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்