பெங்களூரு:கர்நாடக மாநிலம் மங்களூரு, கரோடி பகுதியில் நேற்று மாலை சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவில் இருந்து திடீரென மர்ம பொருள் வெடித்தது. ஆட்டோவில் தீப்பற்றி எரிந்த நிலையில், ஓட்டுநர் மற்றும் பயணி படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
முதலில் பயணியின் உடைமையில் இருந்த எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள் வெடித்து சிதறியதால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம் தீவிரவாத தாக்குதலா என பல்வேறு செய்திகள் காட்டுத் தீ போல் பரவின.
இந்நிலையில், சம்பவம் குறித்த அதிர்ச்சிகர தகவலை கர்நாடக மாநில டி.ஜி.பி. பிரவீண் சூத் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டு உள்ள பதிவில், ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் வெடித்தது விபத்து போல் இல்லை என்றும், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு தீவிரவாதிகள் தயார் ஆனதற்கான அடையாளம் போல் தெரிவதாகவும் டி.ஜி.பி. தெரிவித்துள்ளார்.
மங்களூரு ஆட்டோ வெடி விபத்து மத்திய அரசின் புலனாய்வு மற்றும் விசாரணை ஆணையத்துடன் இணைந்து மாநில போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கர்நாடக டி.ஜி.பி. பிரவீண் தெரிவித்துள்ளார். வெடிவிபத்துக் காரணமான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விசாரிக்க பெங்களூருவில் இருந்து தனிப்படை ஒன்று மங்களூருவுக்கு விரைந்துள்ளது. இதையடுத்து தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியில் தமிழக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சென்னையில் நள்ளிரவில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட சந்தேகிக்கும் வகையில் உலாவும் நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:"சுதந்திர போராட்டம் என்றால் என்ன என்று பிரிட்டனுக்கு தெரியும்" - பிரதமர் ரிஷி சுனக்