பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று(நவம்பர் 19) ஆட்டோவில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஓட்டுநரும், பயணியும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல்கட்ட தகவலில் பயணி எடுத்துச்சென்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடர்ந்தனர். அதன்பின் இந்த வெடிவிபத்து பயங்கரவாத நோக்கத்துடன் செய்யப்படிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே ஆட்டோவில் பயணித்த பயணியின் ஆதார் அட்டை போலீசாரிடம் சிக்கியது. அந்த அட்டையில் உள்ள முகவரியை வைத்து போலீசார் ஹூப்பள்ளியின் மதுரா காலனியில் உள்ள வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஆதார் அட்டையின் அடையாளங்களை கொண்ட இளைஞரின் பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் கூறுகையில், இது எனது மகனின் ஆதார் அட்டையே. ஆனால், அது 6 மாதத்திற்கு முன்பே தொலைந்துவிட்டது. புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்துள்ளோம்.