சுல்லியா/ தட்சின கன்னடா: கர்நாடக மாநிலம் தட்சின கன்னடா மாவட்டத்தின் அரன்தொடு கிராமத்தில் உள்ளது அட்லே - நெக்கரே வனப்பகுதி. சுல்லியா தாலுகாவில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள இந்த வனப்பகுதியில் பயணப்படும் போது பிளாஸ்டிக் தார்பாயால் மூடப்பட்ட சிறு குடிசை ஒன்று இருந்தது.
அந்தக் குடிசைக்குள் சென்று பார்த்தால் ஒரு பழைய அம்பாஸிடர் காரும், பழைய ரேடியோ போட்டியும் இருந்தது. அம்பாஸிடர் காருக்கு முன் ஒரு பழைய சைக்கிளையும் காண முடிந்தது. அந்த குடிசையின் ஒரு பகுதியில் புதிய கூடைகள் குவிக்கப்பட்டு இருந்தன.
அப்போது, ஒரு ஓரத்தில் எரிந்துக்கொண்டிருந்த அடுப்பிலிருந்து எழுந்த புகையில் இருந்து, அடர்ந்த தாடியோடும், பழைய ஆடைகளோடும் ஒருவர் வெளியே வந்தார். அந்த மனிதரின் பெயர்தான் சந்திரேசகர். அவருக்கு வயது 56.
ஏன் காட்டுக்குள் கார்?
சந்திரேசகர் தனது கிராமத்தில் 1.5 ஏக்கர் நிலத்தில் பாக்கு விளைவித்து அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 2003ஆம் ஆண்டு, அங்குள்ள கூட்டுறவு வங்கி ஒன்றில் ரூ. 40,000 கடன் பெற்றுள்ளார். ஆனால், அவரால் அந்த கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. அதனால், அவரின் விவசாய நிலத்தை வங்கி ஏலம் விட்டுவிட்டது.
அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் மிகுந்த துயரத்தோடு, தனது அம்பாஸிடர் காரோடு தங்கை வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கும் அவரின் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்பட, தனியாக வாழ முடிவெடுத்துள்ளார். அடர்ந்த காட்டுக்குள் சென்று தனது அம்பாஸிடர் காரை நிறுத்தி, அதை மழையில் இருந்தும், வெயிலில் இருந்தும் பாதுகாக்க பிளாஸ்டிக் தார்பாயை வைத்து காரை மூடி, அதிலேயே வாழத் தொடங்கிவிட்டார்.
சுயமரியாதையின் சின்னம்
சந்திரசேகர், காட்டிற்குள் ஒரு சுயமரியாதைக்கான சின்னமாக வாழ்ந்து வருகிறார். காட்டில் ஆர்பரித்து ஓடும் ஆற்றில் குளியல், அமைதியான சூழல் என தன்னுடைய 17 வருட வாழ்வை அந்த காருக்குள்ளேயே வாழ்ந்துள்ளார். 2009ஆம் ஆண்டு முதல் கூடை முனையும் பணியில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். அவர் அவரின் ஒரே பொழுதுபோக்கு மங்களூருவின் ஆகாஷ் வாணி வானொலியில் ஒலிபரப்படும் இந்தி பாட்டுகளை கேட்பதுதான். அவர் ஒரு பழைய சைக்கிளையும் தன்னோடு வைத்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர், இவர் குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர், சந்திரசேகரை சந்தித்து ஒரு வீடு அமைத்து தருவதாக கூறியுள்ளார். மேலும், சொன்னப்படி ஒரு வீட்டையும் அமைத்து கொடுத்துள்ளார். ஆனால், அந்த வீடு ரப்பர் தோட்டங்களுக்கு நடுவே இருப்பதால், சந்திரேசகர் அதை மறுதலித்துவிட்டார்.
வாழ்க்கைப்பாடு
இவருடைய குடியிருப்பு, வன விலங்குகள் அடிக்கடி உலாவும் இடத்தில் அமைந்துள்ளது. அதற்கெல்லாம் பயந்து அவர் அந்த இடத்தை விட்டு செல்லவில்லை. அவர் காட்டிற்கு எந்த சேதராத்தையும் ஏற்படுத்தாமல் வாழ்ந்துவருகிறார். இதனால், வனத்துறையும் இவரை தொந்தரவு செய்வதில்லை.
வனத்தில் அவரின் வாழ்க்கை குறித்து சந்திரசேகர் கூறுகையில், "காட்டில் சிறு மூங்கிலைக் கூட நான் வெட்டுவதில்லை. சிறு கிளையை வெட்டினால் கூட வனத்துறை என்மீது வைத்துள்ள நம்பிக்கையை இழந்துவிடும்" என்றார்.
நிலத்தை மீட்பதே கனவு
சந்திரசேகருக்கு ஆதார் அட்டை கிடையாது. ஆனாலும், அவர் அரன்தொடு பஞ்சாயத்தில் தனது முதல் டோஸ் கரோனா தடுப்பூசியைப் போட்டுள்ளார். கரோனா ஊரடங்கு காலத்தில் காட்டுப் பழங்களோடும், தண்ணீரோடும் வாழ்ந்துள்ளார். தனது நிலம் குறித்த ஆவணத்தை தன்னோடு வைத்து வாழ்ந்துவரும் அவருக்கு, இழந்த அந்த நிலத்தை மீட்பது ஒன்றுதான் பெரும் கனவாக உள்ளது.
இதையும் படிங்க: திடீர் கனமழை; வெள்ளத்தில் மிதந்த ஹைதராபாத்!