"உலகை மாற்றக்கூடிய மிகச்சக்தி வாய்ந்த கருவி கல்விதான்" நெல்சன் மண்டேலாவின் புகழ்பெற்ற வார்த்தைகள் இவை. ஜூலை 18ஆம் தேதி, இன்றைய தினம் உலகம் முழுவதும் மன்டேலா தினமாகக் கொண்டாடப்படுகிறது.
20ஆம் நூற்றாண்டை மாற்றியமைத்த கருப்பின காவலன் ஆன நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளை போற்றும் விதமாக, ஐக்கிய நாடுகள் சபை ஜூலை 18-ஐ மண்டேலா தினமாக அறிவித்து 2010ஆம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறது.
மண்டேலாவின் இளமை பருவம்
1918ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் குலு என்ற கிராமத்தில் பிறந்த மண்டேலா, சோசா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். தனது 12ஆவது வயதில் தந்தையை இழந்த மண்டேலா, ஆடு மாடுகள் மேய்த்துக்கொண்டே தனது கல்வியை தொடர்ந்தார்.
1938ஆம் ஆண்டில் போர்ட் ஹர் பல்கலைகழகத்தில் சேர்ந்த இவர், மாணவர் போரட்டத்தில் ஈடுபட்டத்தற்காக இரண்டு ஆண்டுகளில் அங்கிருந்து வெளியேற்றப்படுகிறார்.
பின்னர் தென்னாப்பிரிக்கா பல்கலைகழகத்தில் பி.ஏ பட்டப்படிப்பை முடித்த அவர், ஆப்பிரிக்கன் தேசிய காங்கிரஸ் கட்சி கூட்டங்களில் பங்கேற்கிறார். தென்னாப்ரிக்காவில் கருப்பின அடிமை முறை மிக மோசமாக இருந்த காலம் அது.
வழக்கறிஞர் பணிக்காக தென்னாப்ரிக்கா சென்ற காந்தி, தனது முதல் போராட்டத்தை அங்கிருந்த கருப்பின அடிமைத் தளைக்கு எதிராக நடத்தினார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நிறவெறி சட்டத்திற்கு எதிரான போராட்டம்
இந்த அடிமை முறை பின்னாளில் மேலும் வலுவடைந்து Aparthied என்ற கொடுஞ்சட்டமாக 1950களில் அமலுக்கு வருகிறது. அடிப்படை உரிமைகள், சமூக செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்திலும் கருப்பின மக்கள் ஒடுக்கப்படும் அந்த சட்டங்களுக்கு எதிராக நெல்சன் மண்டேலா குரல் கொடுக்கத் தொடங்கினார்.
1951 ஆப்ரிக்கா தேசிய காங்கிரஸ் அமைப்பின் இளைஞர் அணி அமைப்பின் தலைவாராகிறார் மண்டேலா. 1956ஆம் ஆண்டில் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்படும் மண்டேலா 1961ஆம் ஆண்டு விடுதலை செய்யப்படுகிறார்.
1962ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆயுதப் பயிற்சிக்காக தென்னப்பிரிக்காவை விட்டு வெளியேறும் மண்டேலா, ஜூலை மாதம் நாடு திரும்புகிறார். நாட்டை விட்டு வெளியேறிய குற்றச்சாட்டில் மீண்டும் ஐந்தாண்டுகள் சிறை தண்டனைக்குள்ளாகிறார்.