கேரளாவில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன.
கேரளாவில் ஆட்சியைப் பிடிக்க பாஜக கடும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. இந்த நிலையில், மனந்தவாடி தொகுதியில் பாஜக சார்பாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர், தேர்தலில் போட்டியிட மறுப்புத் தெரிவித்துள்ளார். தான் ஒரு பாஜக ஆதரவாளர் அல்ல, கட்சி அரசியலில் ஈடுபட விருப்பம் இல்லை எனக் கூறி போட்டியிட மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "வேட்பாளராக அறிவிக்க சம்மதம் கேட்டு பாஜக தலைவர்கள் தொலைபேசியில் என்னை அணுகினர். ஆனால், நான் முழு சம்மதம் தெரிவிக்கவில்லை. தொலைக்காட்சியில் ஸ்ரீதரன் உள்பட முக்கியமான தலைவர்களின் அடங்கிய வேட்பாளர் பட்டியலில் எனது பெயர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
இது குறித்து பேசுவதற்காக பாஜக தலைவர்கள் மூன்று வாரங்களுக்கு முன்பு என்னைத் தொடர்புகொண்டார்கள். கட்சி அரசியலில் ஈடுபட விருப்பம் இல்லை. நான் ஒரு பாஜக ஆதரவாளர் இல்லை. எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்றார்.