கொச்சி : நடுவானில் பறந்து கொண்டு இருந்த விமானத்தில் சக பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகளிடம் ரகளையில் ஈடுபட்ட முதியவரை போலீசார் கைது செய்தனர்.
ஐக்கிய அரபு தலைநகர் துபாயில் இருந்து கேரள மாநிலம் கொச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 51வயது மதிக்கத்தக்க ஜிசான் ஜெக்கப் என்பவர், சக பயணிகளிடம் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டு ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், அது குறித்து கேட்க வந்த விமான சிப்பந்திகளிடமும் அந்த நபர் கடுமையாக நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
இட இருக்கை உள்ளிட்ட சிறு சிறு பிரச்சினைகளுக்காக அந்த நபர் பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ஏர் இந்தியா விமான சிப்பந்திகள் தெரிவித்து உள்ளனர். மேலும், வாக்குவாதத்தை தடுக்க வந்த விமான ஊழியர்களிடமும் தகாத முறையில் அந்த நபர் ஈடுபட்டதாக விமான சிப்பந்திகள் கூறி உள்ளனர்.
கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தை விமானம் வந்தடைந்ததும், இது குறித்து விமான நிலைய போலீசாரிடம் ஏர் இந்தியா ஊழியர்கள் புகார் அளித்து உள்ளனர். தகவல் அறிந்து விரைந்த போலீசார், ஜிசன் ஜேக்கப்பை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் மது அருந்தி ரகளையில் ஈடுபட்டாரா என விசாரித்து வருவதாக போலீசார் கூறினர்.
இதனிடையே, பயணியை ஜாமீனில் போலீசார் விடுவித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குநரகமான டிஜிசிஏவிடம் முறையிட உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்து உள்ளது.
முன்னதாக, கடந்த மே மாதம் இதேபோன்று ஒரு பயணி ஏர் இந்தியா விமானத்தில் ரகளையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லி விமானத்தில் விரும்பத்தகாத வகையில் பயணி நடந்து கொண்டதாக ஏர் இந்தியா விமான பணியாளர்கள் அளித்த புகாரில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நடுவானில் பறந்து கொண்டு இருந்த விமானத்தில் சக பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகளிடம் அந்த நபர் தகாத முறையில் நடந்து கொண்டதாக ஏர் இந்தியா விமான ஊழியர்கள் அளித்த புகாரில் விமான நிலைய பாதுகாப்பு அதிகரிகள் அவரை கைது செய்தனர்.
இதற்கு முன் கடந்த மார்ச் மாதம், நடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் புகைப்பிடித்ததாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பயணி மீது மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். லண்டனில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மும்பை வந்த நிலையில், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பயணி, விதிகளை மீறி விமானத்தில் புகைப்பிடித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து கேட்ட விமான ஊழியர்களிடம் அவர் தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்பட்டது. விமான ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்தி இருக்கையில் அமர வைத்த நிலையில், சிறிது நேரம் கழித்து அவர் விமானத்தின் கதவை திறக்க முயன்றதாக கூறப்பட்டது. இது தொடர்பாக விமான ஊழியர்கள் அளித்த புகாரில் அமெரிக்க பயணியை பிடித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க :பிரதமர் மோடி - ஜோ பைடன் சந்திப்பு புது மைல்கல் - மத்திய வெளியுறவுத் துறை!