ஹைதராபாத்:சொமேட்டோ நிறுவனம் ட்விட்டர் பயன்பாட்டில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறது. வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு சலிக்காமல் பதிலளித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் விபரீதமான கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு டெல்லியின் குருகிராம் பகுதியை சேர்ந்த சுபம் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சொமேட்டோ ட்விட்டர் கணக்கை டேக் செய்து, ஹலோ சொமாட்டோ, "நான் டெல்லியில் வசிக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகை நாளன்று பாங் கி கோலி (கஞ்சா கலந்த பாங்கு) குடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க:வீடியோ: ஹோலி பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி "ஊறுகாய் முட்டை மசால்"
எனது பிறந்த நாளும் ஹோலி பண்டிகை நாளிலேயே வருவதால், தயவு செய்து கஞ்சா கலந்த பாங்கு வழங்குகிறீர்களா" என்று பதிவிட்டுள்ளார். இதற்கு சொமேட்டோ நிறுவனம் முதலில் எந்த பதிலும் அளிக்கமால் இருந்து வந்துள்ளது. இருப்பினும், சுபம் விடாமல் 14 முறை கஞ்சா கலந்த பாங்கு கேட்டு, ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சொமேட்டோ நிறுவனம், "யாராவது குருகிராமை சேர்ந்த சுபமிடம் சொல்லுங்கள், நாங்கள் பாங் கி கோலி (கஞ்சா) டெலிவரி செய்வது கிடையாது. இருப்பினும், அவர் 14 முறை கேட்டுவிட்டார்" என்று பதிவிட்டிருந்தது.
இந்த ட்வீட் டிரெண்டாகி அதிகப்படியான ரீட்வீட்களையும், கமெண்ட்ஸ்களையும் பெற்று வந்தது. நெட்டிசன்கள் சுபமுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் ட்வீட் செய்து வந்தனர். இதனிடையே டெல்லி போலீசாரின் கண்களில் இந்த சொமேட்டோ விவகாரம் சிக்கியது. இதையடுத்து டெல்லி போலீசாரும் அந்த ட்வீட்டுக்கு பதிலளித்தனர். அந்த வகையில், சுபம் குறித்து சொமேட்டோ பதிவிட்ட ட்வீட்டுக்கு, "யாராவது சுபமை பார்த்தால், அவரிடம் கஞ்சா கலந்த பாங்கை குடித்து விட்டு, வாகனம் ஓட்ட வேண்டாம் என்று சொல்லுங்கள்" என பதில் அளித்துள்ளது.
இந்த ட்வீட்டையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாள்களில் பாங்கு குடிப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. இதனாலேயே சொமேட்டோ ட்வீட் விவகாரம் பிரபலமாகிவிட்டது. இந்த ஆண்டு மார்ச் 8ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, டெல்லி போலீசாரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக செல்லுதல், போக்குவரத்து விதிகளை மீறுதல், பாதசாரிகளுக்கு இடையூறு அளித்தல் உள்ளிட்டவற்றை செய்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க:போலீசார் மீது துப்பாக்கிச் சூடு.. நூலிழையில் உயிர் தப்பிய போலீஸ்.. கோவையில் திக்.. திக்.. சம்பவம்..