மத்தியப் பிரதேசம்: ஜபல்பூர், தன்வந்திரி நகர் ஜசுஜா நகரில் வசிப்பவர் அனுபம் ஷர்மா (31). ஷேர் ஹோல்டிங் நிறுவனத்தில் பணிபுரிந்த சர்மா, பிப்ரவரி 16 ஆம் தேதி, வீட்டிலிருந்து வேலைக்குச் சென்ற சிறிது நேரத்திலேயே சந்தேகத்திற்கு இடமான முறையில் மாயமாணார். இவரின் குடும்பத்தினரும் அவரை தீவிரமாக தேடி வந்தனர். எனினும் அனுபம் ஷர்மாவை கண்டுபிடிக்க இயலாததால், குடும்பத்தினர் அருகிலுள்ள சஞ்சீவனி நகர் காவல் நிலையத்தில் பிப்ரவரி 26ஆம் தேதி புகார் அளித்து உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில் சந்தேகத்தின் பேரில் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட நபரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அவர், “டோனி வர்மா என்ற நபருக்கும் அனுபம் ஷர்மாவுக்கும் இடையே சில பிரச்னை இருந்ததாகவும், அதனால் தகராறு ஏற்பட்டு இருந்ததாகவும்’’ விசாரணையின் போது காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், “அந்த் மூக் பைபாஸ் அருகே தன்னை சந்திக்க வருமாறு அனுபமை, டோனி அழைத்ததாகவும், அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, டோனி அனுபமைத் தாக்கியுள்ளார். பின்னர், அனுபமைக் காரில் டோனி அழைத்துச் சென்றதாகவும் பின் டோனியின் கூட்டாளிகள் அனுபமை பிடித்து மரம் வெட்டும் இயந்திரம் மூலம் 10க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டியதாகவும்’’ அவர் தெரிவித்து உள்ளார்.