போபால் :வந்தே பாரத் ரயிலில் சிறுநீர் கழித்ததால் பயணி ஒருவர் 6 ஆயிரம் ரூபாய் பறிகொடுத்த சம்பவம் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சிங்கிராலியைச் சேர்ந்தவர் அப்துல் காதர். உலர் பழங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். ஐதராபாத் மற்றும் சிங்ராலி ஆகிய இரண்டு இடங்களில் அப்துல் காதர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 15ஆம் தேதி ஐதராபத்தில் இருந்து தன் மனைவி மற்றும் 8 வயது மகனுடன் சிங்ராலிக்கு செல்ல அப்துல் காதர் திட்டமிட்டு உள்ளார்.
அதன்படி, ரயில் மூலம் மத்திய பிரதேச மாநிலம் போபாலுக்கு அப்துல் காதர் சென்று விட்டார். போபால் ரயில் நிலையத்திற்கு அப்துல் காதர் தன் குடும்பத்துடன் மாலை 5.20 மணிக்கு சென்ற நிலையில், அங்கிருந்து அவரது சொந்த ஊரான சிங்ராலிக்கு இரவு 08.55 மணிக்கு தான் அடுத்த ரயில் இருந்து உள்ளது.
சிங்ராலி செல்லும் ரயிலில் குடும்பத்துடன் பயணிக்க அப்துல் காதர் முன்பதிவு செய்து இருந்த நிலையில் ரயிலுக்காக நடைமேடையில் காத்திருந்து உள்ளார். அப்போது அப்துல் காதருக்கு அவசரமாக சிறுநீர் வரவே பக்கத்து நடைமேடையில் நின்ற வந்தே பாரத் ரயிலில் ஏறி சிறுநீர் கழித்து உள்ளார்.
கழிவறையை விட்டு வெளியே வந்த அப்துல் காதருக்கு அதிர்ச்சியாக ரயிலின் கதவுகள் மூடப்பட்டு, நிலையத்தை தாண்டி ரயில் சென்று கொண்டு இருந்தது தான். பதறிப் போன அப்துல் காதர் உடனடியாக ரயிலில் இருந்த மூன்று டிக்கெட் பரிசோதகர்கள், மற்றும் 4 காவலர்களிடம் தன் நிலை குறித்து கூறியுள்ளார்.
இறுதியாக அப்துல் காதர் ரயிலுக்குள் மாட்டிக் கொண்டது ரயில் பைலட்டுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அடுத்த நிறுத்தமான உஜ்ஜைனியில் ரயில் நிறுத்தப்பட்டது. டிக்கெட் பெறாமல் அப்துல் காதர் பயணித்த குற்றத்திற்காக வந்தே பாரத் ரயிலின் டிக்கெட் பரிசோதகர் அவருக்கு ஆயிரத்து 20 ரூபாய் அபராதம் விதித்தார்.
இதனிடையே அப்துல் காதர் வந்தே பாரத் ரயிலில் சிக்கிக் கொண்டதை கண்டு செய்வதறியமால் அவரது மனைவி மற்றும் 8 வயது மகன் திகைத்து போய் ரயில் நிலையத்திலேயே நின்று உள்ளனர். மறுபுறம் உஜ்ஜைனி ரயில் நிலையத்தில் இருந்து 750 ரூபாய் டிக்கெட் பெற்று பேருந்து மூலம் போபால் ரயில் நிலையத்திற்கு அப்துல் காதர் விரைந்தார்.
அவர் வருவதற்குள் இரவு 8.55 மணிக்கு புறப்பட வேண்டிய அவர்து சொந்த ஊரான சிங்ராலிக்கு செல்லும் ரயிலும் புறப்பட்டுச் சென்றது. இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் கடும் விரக்திக்குள்ளாகினர். வந்தே பாரத் ரயிலில் அபராதத் தொகை ஆயிரத்து 20 ரூபாய், உஜ்ஜைனியில் இருந்து போபால் வர 750 ரூபாய், தவறவிட்ட ரயிலுக்கு முன்பதிவு கட்டணம் 4 ஆயிரம் ரூபாய் என ஒட்டுமொத்தமாக 6 ஆயிரம் ரூபாய் வரை அப்துல் காதர் இழந்தார்.
வந்தே பாரத் ரயிலில் சிறுநீர் கழிக்கச் சென்று அதனுள் மாட்டிக் கொண்டு ஏறத்தாழ 6 ஆயிரம் ரூபாயை வியாபாரி இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வந்தே பாரத் ரயிலில் அவசர உதவிக்கான கருவிகள் பொருத்தப்படாததே தன் குடும்பம் கடும் இன்னல்களை சந்திக்க வேண்டியதானது என அப்துல் காதர் குற்றஞ்சாட்டி உள்ளார். அதேநேரம் பாதுகாப்பு அம்சங்கள் கருதி வந்தே பாரத் ரயிலில் அது போன்ற வசதிகள் வைக்கப்படவில்லை என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க :மணிப்பூர் பழங்குடியின பெண்கள் விவகாரம்... முக்கிய குற்றவாளி கைது - போலீசார் தகவல்!