டெல்லியின் காசியாபாத்தில் ரூ. 60 லட்சம் பணத்திற்காக வீட்டு உரிமையாளரால் பிஎச்டி மாணவன் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மோடி நகரில் அக்டோபர் 6ஆம் தேதி நடந்துள்ளது. இதுகுறித்து காசியாபாத் போலீசார் கூறுகையில், உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத்தை சேர்ந்தவர் அங்கித் கோகர். இவர் லக்னோவின் பி.ஆர். அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி படித்துவந்தார்.
இவருக்கு சொந்தமாக காசியாபாத்தில் நிலம் இருந்தது. இந்த நிலத்தை விற்பனை செய்வதற்காக அங்கித், காசியாபாத்தின் மோடி நகருக்கு சென்று அங்குள்ள உமேஷ் ஷர்மா என்பவரது வீட்டிற்கு வாடகைக்கு தங்கினார். இதையடுத்து நிலத்தை விற்க அங்கித், உமேஷ் ஷர்மாவிடம் உதவி கேட்டுள்ளார். அவரும் உதவி நிலம் விற்கப்பட்டது. அப்போது உமேஷ் ஷர்மா ரூ. 60 லட்சம் கடன் கேட்டுள்ளார்.
அங்கித்தும் கொடுத்துள்ளார். இதனிடையே அங்கித்தின் பெற்றோர் விபத்தில் உயிரிழந்தனர். இதனையறிந்த உமேஷ் ஷர்மா ரூ. 60 லட்சம் பணத்தை திருப்பிக்கொடுக்காமல், அங்கித்தை கொலை செய்ய திட்டமிட்டார். ஏனென்றால், அங்கித்தை தேடி யாரும் வரமாட்டார்கள் என்று அவர் எண்ணியுள்ளார். அந்த வகையில், தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து அக்டோபர் 6ஆம் தேதி அங்கித்தை கொலை செய்தார். இதையடுத்து அவரது உடலை 4 துண்டுகளாக வெட்டி வெவ்வேறு இடத்தில் போட்டுள்ளார்.
இந்த நிலையில், அங்கித்தின் நண்பர் ஒருவர் அவரை நீண்ட நாள்களாக தொடர்புகொண்டும் போன் ஸ்விட் ஆப்பில் இருப்பதை அறிந்து சந்தேகமடைந்தார். இதனால் மோடி நகருக்கு சென்று உமேஷ் ஷர்மாவிடம் விசாரித்துள்ளார். அவர் தனக்கு ஏதும் தெரியாது என்று பதிலளித்துள்ளார். இதையடுத்து அந்த நண்பர் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது. அப்போது உமேஷ் ஷர்மாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேற்கூறிய உண்மை தெரியவந்தது. இதையடுத்து அவரும் அவருக்கு உடந்தையாக இருந்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அங்கித்தின் உடல் பாகங்களை தேடும் பணி நடந்துவருகிறது எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:பிறந்தநாள் விழாவில் பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு