அகமதாபாத் :13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் மற்றும் அரைஇறுதி சுற்றுகள் நிறைவு பெற்ற நிலையில், இன்று (நவ. 19) கிளைமாக்ஸ் காட்சி அரங்கேற்றம் நடைபெறுகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி நடைபெறுகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான சூழலே நிலவியது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்திய வீரர்கள் தடுமாறி வருகின்றனர். ரோகித் சர்மா, விராட் கோலி தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி கடும் நெருக்கடிக்கு உள்ளானது.
முன்னதாக விராட் கோலி விளையாடிக் கொண்டு இருந்த போது பாதுகாப்பு தடுப்புகளை மீறி இளைஞர் மைதானத்திற்குள் நுழைந்தார். விறுவிறுவென மைதானத்திற்குள் நுழைந்த இளைஞர் நேராக விராட் கோலி நோக்கி ஓடிச் சென்று அவரை பிடித்துக் கொண்டார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் இளைஞரை மீட்டு வெளியே அழைத்துச் சென்றனர்.