மேற்கு வங்கத்தில் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், பாஜக, திருணமூல் ஆகிய இரண்டு முக்கியக் கட்சிகளும் ஒருவருக்கொருவர் எதிராகத் தேர்தல் ஆணையத்தில் புகார்களைப் பதிவுசெய்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது பிளாஸ்டர்டு காலை வேகமாக அசைத்துக்கொண்டிருக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அந்தக் காணொலியில், மம்தா ஒரு காலை மற்றொரு கால் மீது வைப்பதையும் பார்க்க முடிகிறது. இந்தக் காணொலியைச் சுட்டிக்காட்டி, மம்தாவுக்கு உண்மையிலேயே காயம் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுவதாக பாஜக தலைமை கேள்வி எழுப்பியுள்ளது.
கட்டுப்போட்ட காலை அசைக்கும் மம்தா இந்தக் காணொலியை ட்விட்டரில் பகிர்ந்த பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா, "மம்தா பானர்ஜியின் காயம் போலியானது" எனப் பதிவிட்டுள்ளார். தற்போது, மம்தாவுக்கு காயம் ஏற்பட்டதா இல்லையா என்ற சந்தேகம் பரவலாக அனைவரது மனத்தில் எழுந்துள்ளது.
கடந்த 10ஆம் தேதி, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட மம்தா பானர்ஜி தனது வேட்புமனுவைத் தாக்கல்செய்தார். அதன்பின்னர் காரில் ஏற முயன்றபோது அவர் கீழே விழுந்தார். அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அவரைக் கீழே தள்ளிவிட்டு தாக்கியதாக மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டினார்.
இடது காலில் காயமடைந்த மம்தா பானர்ஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். பின்னர், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன மம்தா பானர்ஜி காலில் கட்டுப்போட்டபடி வீல் சேரில் அமர்ந்தபடியே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:திமுக, பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான வன்முறை!